அமெரிக்காவின் அடுத்த குறி: விசாவுக்கான காலம் குறைகிறது
அமெரிக்காவின் அடுத்த குறி: விசாவுக்கான காலம் குறைகிறது
ADDED : ஆக 29, 2025 06:46 AM

வாஷிங்டன்: சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்ற பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் குறைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விசா வழங்குவது உள்ளிட்ட குடியேற்ற நடவடிக்கைகளில் மிகவும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், 1978ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விசாக்களுக்கான கால அளவுகளையும், விதிமுறைகளையும் மாற்ற முடிவு செய்துள்ளார்.
தற்போது மாணவர்களுக்கான, 'எப்' வகை விசாக்கள், கலாசார பார்வையாளர்களுக்கான 'ஜெ' வகை விசாக்கள் வைத்திருப்போர், புதிய சரிபார்ப்பு நடைமுறையின்றி காலவரையின்றி தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இது சிலரை எப்போதும் மாணவர்களாக இருப்பதற்கும், அவர்களுக்கான விசா காலத்தை நிரந்தரமாக நீட்டிக்கவும் உதவுவதாக, அமெரிக்க அரசு கூறுகிறது.
இதையடுத்து, மாணவர் மற்றும் கலாசார பார்வையாளர்களுக்கான விசாக்களின் காலத்தை, நான்கு ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான 'ஐ' வகை விசாக்களின் காலம், 240 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இத்துடன், சீன பத்திரிகையாளர்களுக்கான விசா கால வரம்பு 90 நாட்களாக கடுமையாக குறைக்கப்பட உள்ளது.
இதேபோன்றதொரு முன்மொழிவு கடந்த 2020ம் ஆண்டிலும் முன் வைக்கப்பட்டது. ஆனால் அது அப்போது திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.