கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
ADDED : ஆக 29, 2025 10:15 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில், டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்க சட்டப்படி, பதவி விலகிய துணை அதிபருக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும். அதிபராக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ஆனால், பைடன் ஆட்சி காலத்தில் முன்னாள் துணை அதிபர்களுக்கான பாதுகாப்பு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் வகையிலான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரீசுக்கு இந்த பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது. இதனையடுத்து இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.கடந்த ஆண்டு, டிரம்ப்பை கொலை செய்வதற்கு இரண்டு சதித் திட்டங்கள் நடந்தன. அதனை ரகசிய சேவைப்பிரிவினர் முறியடித்து இருந்தனர். அதிபர்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
கமலா ஹாரீஸ் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ஆகவும், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னி ஆகவும் பதவி வகித்துள்ளார். அடுத்தாண்டு நடக்கும் கவர்னர் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் பூர்விகம், திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமம். இவரது தாய் வழித்தாத்தா பி.வி.கோபாலன். சிவில் சர்வீஸ் அதிகாரி. இவரின் இரண்டாவது மகளான சியாமளா உயர்கல்விக்காக 1960களில் அமெரிக்கா வந்தார். அங்கு, ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1964 ல் மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.