'இந்தியாவுக்கு வரி விதித்ததால் பேச்சுக்கு முன்வந்தது ரஷ்யா'
'இந்தியாவுக்கு வரி விதித்ததால் பேச்சுக்கு முன்வந்தது ரஷ்யா'
ADDED : ஆக 16, 2025 12:24 AM

வாஷிங்டன்: 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு வரி விதித்ததால், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்தது' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தை மதிப்பை காட்டிலும் விலை குறைவாக இருப்பதால், இந்தியா அந்நாட்டிடம் இருந்து மாதம் தோறும் கோடிக்கணக்கான பேரல்கள் இறக்குமதி செய்கிறது.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த பணத் தை வைத்து ரஷ்யா உக்ரைனுடன் தொடர்ந்து போரில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பின் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். பின் இதை 50 சதவீதமாக மேலும் அதிகரித்தார். இது, வரும் 27 முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அலாஸ்காவில் நேற்று சந்தித்து பேசினர்.
இந்நிலையில் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக அவர்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதல் வாடிக்கையாளரான சீனாவையும் ரஷ்யா இழக்க உள்ளது.
இந்த சம்பவங்களுக்கு பின் ரஷ்ய அதிகாரிகள் என் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, பேச விரும்புவதாகக் கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.