UPDATED : ஆக 16, 2025 07:14 AM
ADDED : ஆக 15, 2025 10:29 PM

வாஷிங்டன்: '' உக்ரைனுக்காக பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. மாறாக ரஷ்ய அதிபர் புடினை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக அலாஸ்காவில் இன்று அதிபர்கள் டிரம்ப் - புடின் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்கா சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட், வர்த்தக துறை அமைச்சர் லுட்னிக் , சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிப் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அலாஸ்காவிற்கு விமானத்தில் பயணிக்கும்போது டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உக்ரைனுக்காக நான் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. புடினை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு. தொடர்ந்து தாக்குதல் நடத்துவது என்பது பலத்தை கொடுக்கும் என புடின் நினைக்கிறார்.
ஆனால், அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நான் கருதுகிறேன். மக்களின் உயிரை காப்பாற்ற போரை நிறுத்த நான் பணியாற்றி வருகிறேன். ஒப்பந்தம் ஏற்படுத்த புடின் முன்வரவிட்டால், ரஷ்யா கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்த அமெரிக்க அதிபர் முயற்சிக்க வேண்டும். இது போரை நிறுத்துவதற்கான நேரம். அதற்கான நடவடிக்கையை ரஷ்யா எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.