பிளாஸ்டிக் ஒழிப்பு உடன்பாடு மாநாடு: உற்பத்தியை குறைப்பது பற்றி பேசவில்லை
பிளாஸ்டிக் ஒழிப்பு உடன்பாடு மாநாடு: உற்பத்தியை குறைப்பது பற்றி பேசவில்லை
UPDATED : ஆக 15, 2025 02:13 AM
ADDED : ஆக 15, 2025 02:11 AM

ஜெனீவா: உலகளாவிய பிளாஸ்டிக் ஒழிப்பு உடன்பாட்டை உருவாக்கும் நோக்கில் ஜெனீவாவில் நடக்கும் மாநாடு ஏறக்குறைய மீண்டும் தோல்வியை தழுவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பது குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை.
பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க உலகளாவிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், 2022ல் ஐ.நா., முயற்சியை துவக்கியது. அதன்படி பல சுற்று பேச்சுகள் நடந்தன.
கடந்தாண்டு, ஐந்தாவது முறையாக உலக நாடுகள் ஒன்று கூடின. அப்போது நடந்த பேச்சின்போது, பிளாஸ்டிக் உற்பத்திக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என, 95 நாடுகள் வலியுறுத்தி இருந்தன.
உடன்படிக்கை வாகனங்கள் மின்மயமாகி வரும் இந்த காலத்தில் 2026ம் ஆண்டுக்குப் பின், பெட்ரோலியத்தின் தேவை பெரிய அளவில் குறையும் என்பதால், பெட்ரோலியத்தை விற்க ஒரு மாற்று ஏற்பாடாக பிளாஸ்டிக் உற்பத்தி இருக்க வேண்டும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளும், ரஷ்யாவும் யோசனையை முன் வைத்தன.
பிளாஸ்டிக் மாசுபாட்டை தான் ஒழிக்க வேண்டுமே தவிர, அதன் உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது என ஒற்றைக் காலில் நின்றன. பிளாஸ்டிக் உற்பத்திக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது வளர்ச்சியை பாதிக்கும் என இந்தியாவும் பின்வாங்க, அந்த மாநாடு முழு தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, ஆறாவது முறையாக, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், பிளாஸ்டிக் மாசு உடன்படிக்கை தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கடந்த 9ம் தேதி துவங்கி, நேற்று வரை உலக நாடுகள் ஆலோசனை நடத்தின. இந்தக் கூட்டத்தின் இறுதியில், வலுவான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மிகவும் பலவீனமான ஒரு வரைவு உடன்படிக்கை உலக நாடுகள் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கான ஈக்வடார் நாட்டின் துாதர் லுாயிஸ் வியாஸ் வால்டிவிசோ வரைவு உடன்படிக்கையை வெளியிட்டார்.
அதில், பிளாஸ்டிக் மறுசுழற்சி, கழிவு மேலாண்மை உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால், பிளாஸ்டிக் உற்பத்திக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும், பெட்ரோலிய ரசாயன பொருட்களுக்கான பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகள் முழுதும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த பலவீனமான வரைவு உடன்படிக்கை, பிளாஸ்டிக் ஒழிப்புக்கான முன்னெடுப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, 100க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளன.
அதே சமயம் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் இந்த பலவீனமான உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது ஒரு முக்கியமான மைல்கல் என வளைகுடா நாடான சவுதி அரேபியா புகழ்ந்து தள்ளி இருக்கிறது. இந்தியாவும் அந்நாடுகளுடன் சேர்ந்து கடந்த முறை முன்வைத்த பிளாஸ்டிக் உற்பத்திக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கூடாது என்ற கோரிக்கையை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
எச்சரிக்கை இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை செயலர் நரேஷ் பால் கங்வார், ''வரைவு உடன்படிக்கையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்த அடிப்படை அம்சங்கள் இடம் பெறவில்லை. எனினும் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்கு இது ஒரு துவக்கப் புள்ளியாக இருக்கும்,'' எனக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனும், அதன் 27 உறுப்பு நாடுகளும் இந்த வரைவு உடன்படிக்கை குறைந்தபட்ச தேவையை கூட நிறைவு செய்யவில்லை என கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
எனவே, இதை மாற்றி வலுவான உடன்படிக்கையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. சிலி, பனாமா போன்ற நாடுகளில் தற்போது எழுந்திருக்கும் மாசு பிரச்னைக்கு முடிவு காண, இந்த வரைவு உடன்படிக்கை எந்த வகையிலும் உதவாது என வெளிப்படையாகவே எச்சரித்துள்ளன.
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த வரைவு உடன்படிக்கையை கொண்டு வந்திருப்பதாக மாநாட்டில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆ ர்வலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
'இந்த உடன்படிக்கையால் எதுவும் மாறப் போவதில்லை. இது ஒரு ஏமாற்று வேலை' என அவர்கள் மனம் குமுறி இருக்கின்றனர்.
ஆண்டுதோறும் உலகம் முழுதும் 43 கோடி டன் புதிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு குறுகிய காலமே என்பதால், அவை கழிவுகளாக மாறுகின்றன. இதில், 1.1 கோடி டன் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன. தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி 2040ம் ஆண்டில் 70 சதவீத அளவுக்கு பெருகிவிடும் என கூறப்படுகிறது.