UPDATED : ஆக 31, 2025 10:24 PM
ADDED : ஆக 31, 2025 10:21 PM

மணிலா: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே விருது, பெண் குழந்தைகள் தொடர்பாக பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே (Ramon Magasaysay) நினைவாக, அவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருது சமூக சேவை, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான ரமோன் மகசேசே விருதானது, பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் பெண் குழந்தைகள் கல்விக்காக பணியாற்றி வரும் ' Educate Girls' என்ற லாப நோக்கு அல்லாமல் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை பெறும் இந்தியாவைச் சேர்ந்த முதல் தொண்டு நிறுவனம் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.
பிலிப்பைன்சின் மணிலாவில் வரும் நவம்பர் 7 ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருதுடன், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை இந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த தொண்டு நிறுவனத்தை சபீனா ஹூசைன் என்பவர் 2007 ல் துவக்கினார். இவர் லண்டனில் உள்ள பொருளாதாரத்துக்கான பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு சான்பிரான்சிஸ்கோ நகரில் பணியாற்றினார். பிறகு பெண் குழந்தைகள் கல்விக்காக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ராஜஸ்தான் வந்து ' Educate GIrls' என்ற தொண்டு நிறுவனத்தை அவர் துவக்கினார்.