பிரதமர் மோடி வருகைக்கு முக்கியத்துவம் அளித்த சீனா: வெளியுறவு செயலர் திருப்தி
பிரதமர் மோடி வருகைக்கு முக்கியத்துவம் அளித்த சீனா: வெளியுறவு செயலர் திருப்தி
ADDED : ஆக 31, 2025 09:59 PM

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் கய் குயி விருந்து அளித்தார். அதற்கு சீன அரசே ஏற்பாடு செய்தது, பிரதமரின் வருகைக்கு அந்நாடு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது,'' என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
தியான்ஜின் நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவில் முதல் நிகழ்ச்சியாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசன் நகரில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அவர்கள் வகுத்தனர். மேலும் இரு தரப்பும் அடைய வேண்டிய இலக்குகளையும் நிர்ணயித்தனர்.
எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார். அப்போது பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான இந்தியாவின் திட்டங்களை அவர் கோடிட்டு காட்டுவார். இதன் பிறகு, ரஷ்ய அதிபர் புடினையும் பிரதமர் மோடி சந்தித்துவிட்டு இந்தியா கிளம்புகிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர் கய் குயியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பை சீன அரசு ஏற்பாடு செய்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் மோடிக்கு அவர் விருந்து அளித்தார். ஏறக்குறைய ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடக்கும் பிரதமரின் வருகைக்கு சீனா அளித்த முக்கியத்துவத்தை காட்டும் ஒரு சிறப்பு நிகழ்வாக அது அமைந்தது. நிகழ்ச்சி நிரலில் சிக்கல்கள் இருந்த போதும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, இந்தியா சீனா இடையிலான உறவு குறித்த கொள்கையை பிரதமர் பகிர்ந்து கொண்டார். மேலும், இரு தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும்படி கய் குயியை மோடி கேட்டுக் கொண்டார்.அதற்கு , பல்வேறு துறைகளில் உறவை விரிவுபடுத்தும் சீனாவின் விருப்பத்தை அவர் எடுத்துக் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த பிரச்னை குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி முக்கியமாக எடுத்துக் கூறினார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு வகையில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விளக்கியதுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை புரிந்து கொண்டு அதனை எதிர்க்க இருவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.