5 ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் குடியேற்றம்; ஆஸ்திரேலியாவில் வெடித்த போராட்டம்
5 ஆண்டுகளில் அதிக இந்தியர்கள் குடியேற்றம்; ஆஸ்திரேலியாவில் வெடித்த போராட்டம்
ADDED : ஆக 31, 2025 10:27 PM

கேன்பெரா: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அதிகளவு குடியேறியதைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு எதிராக, பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
அந்த பிரசுரங்களில், '100 ஆண்டுகளில் வந்த கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்களை விட, 5 ஆண்டுகளில் அதிகமான இந்தியர்கள் வந்துள்ளனர். இது நமக்குத் தெரிந்த ஒரு நாட்டிலிருந்து மட்டுமே வந்துள்ளவர்கள். குடியேற்றம் ஒரு கலாசார தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறிய கலாசார மாற்றம் அல்ல. பன்னாட்டு நிதியால் சுரண்டப்படுவதற்கான ஒரு பொருளாதார மண்டலம் ஆஸ்திரேலியா அல்ல,' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியர்களின் இந்தப் போராட்டத்திற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்பை பரப்புவது போல் இருப்பதாகவும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான ஒரு தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் சமூக இயக்கத்திற்கு இந்தப் போராட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர், இரு போலீசார் காயமடைந்தனர்.