/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சாலை சகதியில் உருண்ட அ.தி.மு.க., கவுன்சிலர்
/
சாலை சகதியில் உருண்ட அ.தி.மு.க., கவுன்சிலர்
ADDED : ஆக 06, 2025 12:48 AM

வேலுார்:வேலுாரில், சேறும், சகதியுமான சாலையில் உருண்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலுார் மாநகராட்சி, தொரப்பாடி, 49-வது வார்டில் குண்டும், குழியுமான சாலை, நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அந்த வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் லோகநாதன் நேற்று காலை, சாலையில் தேங்கிய மழை நீரில் உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி சார்பில், 49-வது வார்டில் சாலை பணிகள் நடக்கவில்லை என, லோகநாதன் குற்றம் சாட்டினார்.
வேலுார் மாநகராட்சி, தி.மு.க., மேயர் சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் இரு தரப்பினரையும் கட்டுப் படுத்தினர்.
மேயர் சுஜாதா கூறுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக, இப்பகுதியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. தற்போது பாதாள சாக்கடை பணிகள் முடிந்து, விரைவில் சாலை அமைக்க உள்ளோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தோம். இதை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.