/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் நலத்துறையின் உர நிர்வாகத்தில் குழப்பம்!
/
உழவர் நலத்துறையின் உர நிர்வாகத்தில் குழப்பம்!
ADDED : ஆக 28, 2025 06:54 AM
திருப்பூர்; 'வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில், உர வினியோகத்தில் குழப்பம் நிலவுகிறது' என, விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில், தோட்டக்கலை துறை சார்பில், அனைத்து காய்கறி பயிர்கள், சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் மற்றும் தென்னை மரங்கள் போன்றவை நிர்வகிக்கப்படுகின்றன.
அந்தந்த துறை சார்பில், அரசு வழங்கும் மானியம், இடுபொருள், விவசாய உபகரணம் உட்பட, பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதில், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசன முறையிலும், பெரும்பாலான விவசாயிகள் பயிர் விளைச்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீரில் கரையும் வகையில், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் ரைசோபியம் என, சில நுண்ணுாட்ட சத்துக்கள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகிக்கப்படுகின்றன.
மழையை மட்டுமே எதிர்பார்த்துள்ள மானாவாரி நிலங்களில், வறட்சியை தாங்கி வளரும் பயிர்கள் தான் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படும். குறிப்பிட்ட சீசனில் பெய்யும் மழை, அந்த பயிர் விளைச்சலுக்கு போதுமானதாக இருக்கும். மாறாக, நீரில் கரையும் உரங்களின் பயன்பாடு மிகக்குறைவு தான்.
இது குறித்து, விவசாயிகள் சிலர் கூறியதாவது:
தண்ணீர் வசதி நிறைந்த இடத்தில் விளையும் தோட்டக்கலை பயிர்களுக்கு தான், நீரில் கரைத்து செலுத்த வேண்டிய உரங்களின் தேவை அதிகம்.
ஆனால், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் நீரில் கரையும் உரங்கள், விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் போது, தோட்டக்கலை பயிர்களை விட, மானாவாரி பயிர்களாக இருக்கும் சோளம், நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் போன்றவற்றுக்கு நீரில் கரையும் உரங்களை வேளாண்மை துறையினர் பரிந்துரை செய்கின்றனர்.
இது, வேடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, தோட்டக்கலை பயிர்களுக்கு நீரில் கரைந்து செலுத்தும் உரங்களை அதிகளவில் வினியோகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.