/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
தமிழக பொருளாதார வளர்ச்சி முருகனுக்கு வயிற்றெரிச்சல்: ராஜா
/
தமிழக பொருளாதார வளர்ச்சி முருகனுக்கு வயிற்றெரிச்சல்: ராஜா
தமிழக பொருளாதார வளர்ச்சி முருகனுக்கு வயிற்றெரிச்சல்: ராஜா
தமிழக பொருளாதார வளர்ச்சி முருகனுக்கு வயிற்றெரிச்சல்: ராஜா
ADDED : ஆக 07, 2025 09:51 AM
மன்னார்குடி: ''தமிழ்நாடு, மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், இவற்றை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்து பேசி இருக்கிறார். இது, அவருடைய வயிற்றெரிச்சலைக் காட்டுகிறது, '' என, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.,ராஜா குற்றஞ்சாட்டினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், நேற்று அவர் அளித்தபேட்டி:
இந்தியாவில்,பொருளாதாரத்தில், அதிவேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என, மத்திய அரசின் தரவுகள் தெரிவித்துள்ளன. தமிழக அரசின், கடந்த நிதிநிலை அறிக்கையில், 'தமிழகம், 9 சதவீதம் வளர்ச்சி அடையும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதையெல்லாம் கடந்து, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக, உயர்ந்து இருக்கிறது. இதை மத்திய அரசு தரவுகள் தான் கூறுகின்றன.
இதற்கு முன், பொருளாதாரத்தில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது, இரட்டை இலக்கை அடைந்திருந்தது.
தேர்தல் வாக்குறுதியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'அடுத்த, 10 ஆண்டுகளில், தமிழகம், பொருளாதார வளர்ச்சியில், இரட்டை இலக்கத்தை அடையும்' என, தெரிவித்திருந்தார்.
ஆனால், நான்கு ஆண்டுகளில், இரட்டை இலக்கு வளர்ச்சியாக 11.19 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன்பின், தனிநபர் வருமானம், பன்மடங்கு உயரும். தமிழ்நாடு, மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், தமிழகத்தைச் சாராத வேறு யாரேனும், ஒன்றிய அமைச்சர்களை விமர்சித்து இருந்தால் மன்னித்து விடலாம். தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் முருகன், அரசியல் காரணத்துக்காக மட்டும், தமிழக அரசை விமர்சித்து பேசி இருப்பது, அவரது வயிற்றெரிச்சலை காட்டுகிறது.
இவ்வாறு, டி.ஆர்.பி.,ராஜா கூறினார்.