/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கோட்டையன் செல்லாக்காசு உதயகுமார் சாடல்
/
செங்கோட்டையன் செல்லாக்காசு உதயகுமார் சாடல்
ADDED : செப் 17, 2025 07:24 AM
மதுரை : ''ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை எழுப்பியவர்கள் செல்லா காசாக போய்விட்டார்கள். பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க.,விற்கு சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும் எந்த பின்னடையும் ஏற்படுத்தாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையால் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் விதமாக மதுரையில் நேற்று உதயகுமார் கூறியதாவது: பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுக்காத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்னையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அ.தி.மு.க.,வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள்.
தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் அ.தி.மு.க.,விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
ஒவ்வொரு தொண்டரும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. பழனிசாமிக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறிய வேண்டும். இவ்வாறு கூறினார்.