/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் பெண் சிசு சடலமாக மீட்பு
/
மேட்டுப்பாளையத்தில் பெண் சிசு சடலமாக மீட்பு
ADDED : ஆக 12, 2025 09:53 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை எதிர்புரம் உள்ள புதருக்குள் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் எல்.எஸ்.புரம் பகுதிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக எதிர்ப்புறம் உள்ள புதர் ஓரத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது அந்த இடத்தில் துர்நாற்றம் வீசி உள்ளது. அவர் அருகே சென்று பார்த்த போது பச்சிளம் பெண் சிசு சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் போலீசார் இந்த புதருக்குள் பெண் சிசிசுவின் சடலம் எப்படி வந்தது, யாராவது வீசி சென்றனரா, அல்லது முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை பெற்ற தாயே தூக்கி வீசி சென்றுள்ளாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.