/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., திட்ட முன்னோடிகள் சிலை திறப்பு; முதல்வர் ஸ்டாலின் மரியாதை
/
பி.ஏ.பி., திட்ட முன்னோடிகள் சிலை திறப்பு; முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பி.ஏ.பி., திட்ட முன்னோடிகள் சிலை திறப்பு; முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பி.ஏ.பி., திட்ட முன்னோடிகள் சிலை திறப்பு; முதல்வர் ஸ்டாலின் மரியாதை
ADDED : ஆக 12, 2025 09:36 AM

பொள்ளாச்சி: பி.ஏ.பி., திட்டம் உருவாக காரணமான முன்னோடிகளின் சிலைகள், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறந்த நீர்ப்பாசன திட்டமான, பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னோடிகளை சிறப்பிக்கும் வகையில் சிலைகள், திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்படும், என, தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, நான்கு கோடியே, 28 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர், 'சி.சுப்ரமணியம் வளாகம்' என்று பெயர் சூட்டி, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.
மேலும், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகாலிங்கம், பழனிசாமி சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.
கீழ்தள அரங்குக்கு, 'வி.கே.பழனிசாமி அரங்கம்' என்றும், மேல்தள அரங்கத்துக்கு 'பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்' என்றும் பெயர் சூட்டப்பட்டது. பி.ஏ.பி., திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின், பி.ஏ.பி., திட்ட முன்னோடிகள் உருவச்சிலைகள், அரங்கங்களை திறந்து வைத்தார். அதன்பின், அவர்களது உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
அதேபோன்று, ஆழியாறு அணை பூங்காவில், 2.83 கோடி ரூபாய் செலவில் பி.ஏ.பி., பாசன திட்ட பணி நடந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களது நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, எம்.பி.,ஈஸ்வரசாமி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பலர் பங்கேற்றனர்.