/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி எவ்வளவு அவசியமோ கற்பனை உலகமும் முக்கியம்
/
கல்வி எவ்வளவு அவசியமோ கற்பனை உலகமும் முக்கியம்
ADDED : செப் 07, 2025 06:33 AM

இ ன்றைய கால கட்டத்தில், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமே பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால், பெரும்பாலான வீடுகளில் விளையாட்டுப் பொருட்களும் கற்றல் சாதனங்களாக மாறி வருகின்றன. இவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அறிவியல் கருவிகள், கணித விளையாட்டுகள் போன்றவை சந்தையில் அதிகரித்துள்ளன. இவை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன என்பது மறுக்க முடியாது.
குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள், விளையாட்டுகள் அனைத்தும் ஒரு வகையான கற்றல் வடிவமாக, விளையாடும் நேரம் கூட ஒரு பாடசாலை நேரத்தைபோல் மாறுவது, அவர்களது இயல்பான கற்பனைத் திறன் மற்றும் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்குமோ என்கிற கேள்விகளும் எழுகின்றன.
பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே அறிவாளியாக வளர வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் பிறரை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், விளையாட்டு பொருட்களை தேர்வு செய்வதும், அவர்களது விருப்பமாக உள்ளது. இதனால், குழந்தையின் சுதந்திரமான சிந்தனைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உளவியல் பேராசிரியர் பாலமுருகன் கூறுகையில், ''விளையாட்டு பொருட்கள் கல்வி சார்ந்ததாக இருந்தாலும், ஒருபோதும் திணிக்கக்கூடாது. இது கற்றல் மீதான வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களது கற்பனை உலகம், சந்தோஷம், சுதந்திரம் ஆகியவையும் அவசியமானது,'' என்கிறார்.