/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் சூழ்ச்சியை தோலுரிக்கும் புளிய மரம்
/
அரசியல் சூழ்ச்சியை தோலுரிக்கும் புளிய மரம்
ADDED : செப் 07, 2025 06:15 AM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய 'ஒரு புளிய மரத்தின் கதை' என்ற நாவல் குறித்து, 'கார்டுவெல் மேனுபேக்சரிங்' கம்பெனி நிர்வாக இயக்குனர் ரவீந்திரன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த 10 நாவல்களில், சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யும் ஒன்று. எந்த எழுத்தாளரிடம் கேட்டாலும், அவர்களுக்கு பிடித்த 10 புத்தகங்களில் இந்த புத்தகத்தையும் குறிப்பிடுவர். 1966ல் வெளிவந்த இந்த நாவல் இதுவரை 1.5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. தமிழில் வந்த முதல் சூழலியல் நாவல் என்றும் சொல்லலாம். நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், அதை அறிய முடிகிறது.
மரங்களை பற்றி இன்றைக்கு நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சூழலியல் நாவல் இது மட்டுமே. ஒரு புளிய மரம் இந்த நாவலின் கதாநாயகன். அந்த புளிய மரத்துக்கு ஒரு கதை அல்லது ஒரு வரலாறு இருக்கிறது. அந்த ஊரில் உள்ள ஒரு முதியவர், புளிய மரத்தின் கதையை சொல்வதுபோல் நாவல் நகர்கிறது.
ஒரு ஊரில் ஒரு குளம் இருக்கிறது. அதனருகில் ஒரு புளிய மரமும் இருக்கிறது. அந்த ஊருக்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கு அந்த குளமும், மரமும் தனித்த அடையாளமாக இருக்கின்றன. அந்த ஊருக்கே நீர் வார்த்து வந்த அந்த குளம், சில அற்ப காரியங்களுக்காக அழிக்கப்படுகிறது. புளிய மரம் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த மரத்துக்கும் ஆபத்து வருகிறது. அதே ஊரில் வசிக்கும் தாமோதர ஆசான் என்ற முதியவரின் முயற்சியால், வெட்டப்படாமல் தடுக்கப்படுகிறது. இருந்தும், பிரதான கிளை ஒன்றை இழந்து விடுகிறது.
குளம் இருந்தபோது அந்த இடம் புளியகுளம் என்றழைக்கப்பட்டது. குளம் அழிக்கப்பட்ட பின், அந்த இடம் புளிய மரத்தடி என்றழைக்கப்படுகிறது. ஆண்டுகள் செல்லச்செல்ல, அந்த பகுதி ஒரு நகரமாக வளர்ச்சியடையத் துவங்குகிறது. நகர வளர்ச்சியுடன் அங்கு அரசியலும் வளர்கிறது. இந்த சூழ்நிலையில், பல ஆண்டுக்கு பின், மீண்டும் அந்த புளிய மரத்துக்கு ஆபத்து வருகிறது. இந்த ஆபத்தில் இருந்து புளிய மரம் தப்பித்ததா என்பதே கதையின் முடிவு. வாசகர்கள் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு புளிய மரத்தை மையமாக வைத்து, கால மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்கள், சமூகத்தின் வளர்ச்சி, அரசியல் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என, விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது.
சிறு கிராமமாக இருந்த ஊர், நகரமாக வளர்ச்சி அடையும்போது, அங்கிருந்த நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டு, பூங்கா அமைக்கின்றனர். மரங்கள் இருந்த இடத்தில் பூச்செடிகளை நடுகின்றனர். அந்த ஊரில் வானுயர்ந்து நின்ற மரங்கள் எல்லாம் மறைந்து, அந்த இடத்தில் சிறிய பூங்காவில் செடிகள் மட்டும் இருக்கின்றன. நகர வளர்ச்சியும், நாகரிக வளர்ச்சியும் இயற்கையின் இருப்பிடங்களை இல்லாமல் செய்து விடுகிறது என்பதை இந்த நாவலில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி மிக அற்புதமாக படைத்து இருக்கிறார்.