
ஹாங்காங்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ, 4 கிளப் அணிகளுக்கு தலா 100 கோல் அடித்து சாதனை படைத்தார்.
ஹாங்காங்கில், சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து 12வது சீசன் நடந்தது. இதன் பைனலில் அல் நாசர், அல் அஹ்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய அல் அஹ்லி அணி 5-3 என வெற்றி பெற்று, 2வது முறையாக (2016, 2025) கோப்பை வென்றது.
இப்போட்டியில் அல் நாசர் அணியின் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு கோல் அடித்தார். இது, அல் நாசர் அணிக்காக ரொனால்டோ அடித்த 100வது கோல் (113 போட்டி) ஆனது. கால்பந்து அரங்கில், 4 கிளப் அணிகளுக்காக தலா 100 அல்லது அதற்கு மேல் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ. ஏற்கனவே இவர், ரியல் மாட்ரிட் (450 கோல், 438 போட்டி), மான்செஸ்டர் யுனைடெட் (145 கோல், 346 போட்டி), யுவென்டஸ் (101 கோல், 134 போட்டி) அணிகளுக்காக 100+ கோல் அடித்திருந்தார். இதற்கு முன் ஸ்பெயினின் இசிட்ரோ லங்காரா, பிரேசிலின் ரொமாரியோ, நெய்மர் தலா 3 கிளப் அணிகளுக்கு இப்படி கோல் அடித்திருந்தனர்.