/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
தமிழக அணி சாம்பியன் * தேசிய பாட்மின்டனில்...
/
தமிழக அணி சாம்பியன் * தேசிய பாட்மின்டனில்...
ADDED : டிச 23, 2025 11:32 PM

விஜயவாடா: தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் அசத்திய தமிழக ஆண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
ஆந்திராவின் விஜயவாடாவில் மாநிலங்களுக்கு இடையிலான 78வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் அரையிறுதியில் தமிழக அணி 3-2 என உத்தரகாண்ட்டை வீழ்த்தியது. அடுத்து நடந்த பைனலில் தமிழகம், வலிமையான ஹரியானா அணிகள் மோதின.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் ஹரியானாவின் மன்ராஜ் சிங், தமிழகத்தின் சங்கர் முத்துசாமியை வென்றார். அடுத்த போட்டியில் ஹரியானா வீரர் பாரத் ராகவ், தமிழகத்தின் ரித்விக்கை வென்றார். தமிழக அணி 0-2 என பின்தங்கியது.
அடுத்து நடந்த இரட்டையர் போட்டியில் தமிழகத்தின் ஹரிஹரன், ரூபன் ஜோடி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒற்றையரில் தமிழக வீரர் சுகி ஜாய் பாலா சிங், கவுதம் அரோராவை வீழ்த்த, போட்டி 2-2 என சமன் ஆனது.
கடைசியாக இரண்டாவது இரட்டையர் போட்டி நடந்தது. தமிழகத்தின் நவீன், லோகேஷ் ஜோடி, ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போராட்டத்துக்குப் பின், மயங்க், ஆர்யன் ஜோடியை சாய்த்தது. முடிவில் தமிழக அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவு பைனலில் ஹரியானா அணி, சிந்து இடம் பெற்ற ஆந்திராவை சந்தித்தது. சிந்து விளையாடாத நிலையில் ஹரியானா அணி 3-0 என வென்று சாம்பியன் ஆனது.

