/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் 'லோம-விலோம' பயிற்சி குறித்த முன்னுரை
/
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் 'லோம-விலோம' பயிற்சி குறித்த முன்னுரை
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் 'லோம-விலோம' பயிற்சி குறித்த முன்னுரை
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் 'லோம-விலோம' பயிற்சி குறித்த முன்னுரை
ADDED : செப் 17, 2025 11:30 PM
கடந்த வாரம், உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம'பயிற்சி குறித்த முன்னுரையின், தொடர்ச்சியை இந்த வாரம் பார்ப்போம்.
லோம -விலோம சட்டங்களுடன் ஒரு யோகாசன வரிசையை உருவாக்கலாம். அதில், பிராணாயாமம் பெரும் பங்கு வகிக்கிறது. உடலை மேலே எழுப்பும்போது மூச்சை உள்ளிழித்தும், உடலை கீழே இறக்கும்போது மூச்சை வெளியிட வேண்டும். சுவாசிப்பது என்பது ரசாயன காற்றுகளின் மாற்றம் மட்டும் அல்ல. உடல் அணு ஒவ்வொன்றையும் மின்விசை ஆற்றலால் நிரப்பி வெளியிடுவதாகும்.
உடல் அணுக்களுக்கு துருவ நோக்கு உண்டு. அது, பூமியின் துருவ நோக்கிற்கு நேர்மாறானது. நம் உடல் சிறப்பாக இயங்கி இவ்விரண்டும் ஒரு சமநிலையில் இருப்பது அவசியம். இந்த சமநிலையை நீண்ட ஆழ்ந்த சுவாசத்தினால், நாம் முறையே பெற்றிடலாம். ஓய்வு நிலையிலும், ஆசன நிலையிலும் நீண்ட ஆழ்ந்த சுவாசம் மிக அவசியம். எந்த ஒரு கடுமையான இயக்கத்திற்கு பின் ஓய்வு அவசியம். அந்த ஓய்வு நிலைக்கும் ஒரு வடிவம் வேண்டும்.
ஆசன நிலைக்கு செல்லும்போது உடலை கடுமையாக இயக்கி, ஆசன நிலையில் ஓய்வுடன் இருப்பது அவசியம். சமஸ்திதி ஆசன வரிசையில் ஓய்வு நிலை என்பது சாதாரணமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் நிற்பதே. அதேபோல், லோம - விலோம வரிசையில் சவ ஆசனம் அல்லது ஒரு சவத்தின் நிலையே ஓய்வு நிலையாக கொண்டுள்ளது.
உடலியல் மற்றும் உடற்கூறுபாட்டின் பிரகாரம் முதுகு தண்டின் கடைசி பகுதி 'கோனஸ் மெடுல்லாரிஸ்' மிக முக்கியமானதாகும். இதனை சமஸ்கிருதத்தில் 'கந்தா' என்பார்கள். ஹதயோக இலக்கணத்தில், உடலின் எந்த ஒரு அசைவும் சக்தியை நிரப்பும்படி இருத்தல் அவசியம். இதன்மூலம் குண்டலினி சக்தியை பெறலாம். கால்களை மேலே துாக்கும்போது சக்தி கால்களினுாடே வழியாகவும், தலை அல்லது உடலை துாக்கும்போது சக்தியானது முதுகுத்தண்டினுாடே கந்தாவை சென்றடைகிறது. உடல், தலை மற்றும் கால்களை ஒரே நேரத்தில் துாக்கும்போது, உடலின் இரு புறங்களில் இருந்தும் சக்தியானது கந்தாவை சென்றடைகிறது. இதனால், மிக வலிமைமிக்க ஒரு சக்தியின் தேக்கத்தை கந்தாவில் அளிக்கிறது.
இதேபோல் உடலை முன்னும், பின்னுமாக வளைக்கும்போது, சக்தியின் ஓட்டமானது உடலில் மாறுபடுகிறது. உடலை முன்பக்கம் வளைக்கும்போது சக்தி கந்தாவில் இருந்து தலைக்கும், பின்பக்கம் வளைக்கும் போது சக்தி தலையில் இருந்து கந்தாவை சென்றடையும்.
என்வே, ஹதயோக இலக்கண விதிப்படி காலை துாக்கினால், அதை சமநிலைப்படுத்த அடுத்து தலை அல்லது உடலை துாக்க வேண்டும். அதேபோன்று முன்னால் குனிவதை சமநிலைப்படுத்த பின்னால் வளைவது அவசியம். எனவே, இந்த 'கோனஸ் மெடுல்லாரிஸ்' என்பது நம் உடலின் ஆற்றல் மிகுந்த சக்தியை தேக்கி வைத்திருக்கும் ஒரு கிடங்காகும். இந்த சக்தியை நாம் அதிகரிக்கலாம். அல்லது தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், தற்காலத்து மனிதர்கள் ஏதோ காரணத்தினால், ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் உடலாலும், மனதாலும் அலைபாய்ந்து கொண்டுள்ளனர். ஆனால், யோகிக்கள் தன் உடலையும், மனதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
உடலில் தோன்றும் இந்த மாற்றங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். நம் உடலின் சக்தியை பற்றிய விழிப்புணர்வு, அதை எவ்வாறு தோற்றுவிப்பது, கட்டுப்படுத்துவது, சேமிப்பது மற்றும் சரியான வகையில் பயன்படுத்துவதை தெரிந்து கொள்வது அவசியம்.
மனிதனின் வாழ்வு புலியின் மீது சவாரி செய்வது போன்றது. ஹதயோக பயிற்சியாளர்களுக்கு, இந்த புலியை அடக்கி ஆளும் திறன் கிடைத்துவிடுகிறது. 'ஹ' என்றால் வலிமையுள்ள இவ்வண்டத்தின் நேர்மின் ஆற்றலை குறிக்கும். 'த' என்பது வலிமையுள்ள எதிர்மின் ஆற்றலாகும். 'ஹதயோகம்'என்பதே இந்த இரண்டு எதிர்மறை சக்திகளையும் சமநிலைப்படுத்த 'ேஹாமியோ ஸ்டாஸிஸ்' நிலையை அளிப்பதேயாகும்.
யோகத்தின் சொல் அட்டவணையின்படி, இதனை சக்தா-சக்தி, பிராண-அபான மற்றும் லோம-விலோம என்றும் அழைக்கலாம். இவ்விரு ஆற்றல்களை சமநிலைப்படுத்துவதே லோம-விலோம வரிசை ஆசனங்கள். லோம என்றால் நேர்மின். விலோமா என்றால் எதிர்மின் ஆற்றலாகும்.
ஹதயோக ஆசனங்களாகிய இந்த லோம-விலோம வரிசையில் உள்ள ஆசனங்கள் படுத்த நிலையில் செய்வனவாகும். ஹதேனா வகை ஆசனங்கள் அமர்ந்த நிலையையும், சமஸ்திதி ஆசனங்கள் நின்ற நிலையை குறிக்கும்.
எதை நாம் பயன்படுத்தமல் உள்ளோமோ அதை நாம் இழந்து விடுவோம் என்பதே விதி. உதாரணத்திற்கு, 'அப்பென்டிக்ஸ்' என்ற உறுப்பை பயன்படுத்தாததால் மனிதனுக்கு அது தேவையற்றுப்போனது. மார்பு பகுதியில் உள்ள தைமஸ் சுரப்பி பெரும்பாலானோருக்கு செயல்படுவதே இல்லை.
தற்கால மனிதன் செயலற்ற, சோம்பலான வாழ்வே வாழ்கிறான். தன் உடலை சிறிதளவே உபயோகிக்கிறான். நிற்கிறான். நடந்து தன் வாகனத்தில் ஏறுகிறான். நாற்காலியில் அமர்கிறான். மெத்தையில் உறங்குகிறான். இவற்றிற்கு மிக குறைந்த உடல் இயக்கமே தேவை.
ஹதயோக பயிற்சியும், அதில் காணப்படும் பல்வேறு நிலைகள், உடல் அசைவுகள், செலவே இல்லாமல் உடல், மனம் மற்றும் உணர்வுகளின் ஆரோக்கியத்தை பெற முடியும்.
ஹதயோகத்தின் பிரதான ஆசனங்கள் இந்த லோம -விலோம வரிசையில் உள்ளன. நவாசனம், படகுநிலை, சர்ப்பாசனம் போன்றவை. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பயன்கள் உள்ளன. அனைத்தையும் திரட்டி பார்த்தால் பொதுப்பயன் உடலில் சக்தியை துாண்டுவதே.
இந்த லோம-விலோமா வரிசையில் உள்ள நிலைகள் ஒவ்வொரு திசுவையும் இயக்குகிறது. உள்ளுறுப்புகள் அனைத்தையும் துாண்டிவிடுகிறது.
லோம-விலோம பயிற்சிக்கான அடிப்படை நிலைகள் மற்றும் அதன் செயல் விளக்கங்களை அடுத்த வாரம் முதல் பார்ப்போம்...