/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் ரிசார்ட்டிற்கு அரசு இடம் தாரைவார்ப்பு
/
தனியார் ரிசார்ட்டிற்கு அரசு இடம் தாரைவார்ப்பு
ADDED : ஆக 24, 2025 06:28 AM

தனியார் நிறுவனம் நடத்தும் ரிசாட்டிற்கு பாதை அமைக்க, அரசு புறம்போக்கு இடத்தை நீண்டகால குத்தகைக்கு வழங்க அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடற்கரை பகுதிகளில் கட்டிய ரிசார்ட்களை, தனியாருக்கு குத்தகை விட்டுள்ளது. அவ்வாறு, பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான 'சான்ட் டியூஸ் பேரடைஸ் பீச்'சை தனியார் நிறுவனம் குத்தகை எடுத்து நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம், அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கிளை வாய்க்காலை ஒட்டியுள்ள தனியார் இடத்தில் 'சான் டியூன்ஸ் கிளப்ஸ் அன்டு ரிசார்ட்' அமைக்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் மணவெளி வருவாய் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 932 சதுர அடி இடம் உள்ளது. புதிதாக அமைக்கவுள்ள ரிசாட்டிற்கு, நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் தெற்கு கரையில் இருந்து, மணவெளி வருவாய் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தின் வழியாக செல்வதற்கு பாதை அமைக்க 7,532 சதுர அடி இடத்தை நீண்ட கால குத்தகைக்கு அரசு வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 12ம் தேதி புதுச்சேரி தாசில்தார் பிரித்திவி கடந்த 12ம் தேதி வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பு தொடர்பாக எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின், அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களில் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டுமாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசு இடத்தை தனியாருக்கு நீண்டகால குத்தகை விட முடிவு செய்த அரசு, அது தொடர்பாக அறிவிப்பு குறித்த நோட்டீசை, மக்கள் நடமாட்டமே இல்லாத, இடத்தில் ஒட்டினர். அதுவும் அடுத்த நாளே கிழிந்து விட்டது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.