தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம்; ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி முடிவு
தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம்; ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி முடிவு
ADDED : செப் 07, 2025 04:46 AM

சென்னை : பா.ம.க., நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
ராமதாஸ் தன் மகள்வழி பேரன் முகுந்தனை, பா.ம.க., இளைஞரணி தலைவராக நியமித்தார். அதற்கு, அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அரசியலில் இருந்து முகுந்தன் ஒதுங்கினார்.
தன் மகன் முகுந்தனை ஏற்காததால் கோபமடைந்த ஸ்ரீகாந்திமதி, தன் சகோதரர் அன்புமணிக்கு எதிராக அரசியலில் களமிறங்கியுள்ளார். பா.ம.க., நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு, பூம்புகார் மகளிர் மாநாடு என கட்சியின் முக்கிய நிகழ்வுகளில், ராமதாசுக்கு இணையாக அவரும் மேடையில் அமர்ந்திருந்தார்.
தற்போது, சட்டசபை தொகுதிவாரியாக, அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஸ்ரீகாந்திமதியும் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், முதல் கட்டமாக கட்சியினர் ஏற்பாடு செய்யும் சிறு சிறு நிகழ்வுகளில் பங்கேற்க இருப்பதாகவும், பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
முதல் நிகழ்ச்சியாக, கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில், 10, பிளஸ் ௨ பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழாவில், ஸ்ரீகாந்திமதி நேற்று பங்கேற்க இருந்தார்.
இதற்கு ஏற்பாடு செய்திருந்த பா.ம.க., தஞ்சை மாவட்ட செயலரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. இதனால், இந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், சில நாட்களில் இந்நிகழ்ச்சி நடக்கும் என்றும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில், ஸ்ரீகாந்திமதி பங்கேற்பார் என்றும், பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.