ADDED : செப் 07, 2025 04:56 AM

காஞ்சிபுரம் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. பாதுகாப்புக்கு செல்லும் போலீசாரையே தாக்குகின்றனர். குண்டர் சட்டத்தை போலீசார் தவறாக பயன்படுத்துகின்றனர்.
எதை பேசினாலும், குண்டர் சட்டம் பாய்ச்சுகின்றனர். என் மீது கூட, ஏற்கனவே இரு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். ஆனால், என் மீது அச்சட்டம் பிரயோகிக்கப்பட்டதே தவறு என நீதிபதி சொல்லிவிட்டார்.
ஆறு மாதம் சிறை தண்டனையை இருமுறை பெற்றேன். என் மீது தவறாக வழக்கு பதியப்பட்டது என கோர்ட் வாயிலாக நிரூபித்த பின்பும், தவறு இழைத்த அரசுக்கோ, அதிகாரிக்கோ தண்டனை எதுவுமில்லை.
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள சலுகை தேவையான ஒன்று. ஆனாலும், அதை போராடித்தான் பெற வேண்டி உள்ளது.
திபெத்திலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுத்த மத்திய அரசு, இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு கொடுக்கவில்லை.
கேட்டால், அவர்கள் சட்டத்தை மீறி வந்தவர்கள் என்கின்றனர். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு கனடா, ஸ்வீடன், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றன.
திருச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு நாம் தமிழர் சார்பில் போட்டியிட உள்ள, அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர். அதற்காகவே மாநாடு கூட்டுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.