'தி.மு.க., உறுப்பினராகும்போதே கொள்ளையடிக்கும் உரிமம் வெகுமதி'
'தி.மு.க., உறுப்பினராகும்போதே கொள்ளையடிக்கும் உரிமம் வெகுமதி'
ADDED : செப் 07, 2025 04:38 AM

சென்னை : சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர், பேருந்தில் சென்றபோது, 4 சவரன் நகை திருட்டு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரை விசாரித்த போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், திருப்பத்துார் மாவட்டம், நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண், நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதும், நரியம்பட்டு ஊராட்சி மன்ற பெண் தலைவர் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், பாரதியின் படத்தை, தன் சமூக வலைதள பக்கத்தில், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டு, கூறியுள்ளதாவது:
தி.மு.க.,வில், ஒருவர் உறுப்பினராகும்போது, கொள்ளையடிப்பதற்கான உரிமமும் அவருக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது. திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர், பஸ்சில் பயணித்தபோது, பயணி ஒருவரிடம் இருந்து 4 சவரன் தங்க நகையை திருடியுள்ளார்.
பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பது, திருடுவது என துவங்கி, அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, தி.மு.க., தன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிப்பதற்கான சம வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
'திருடன் கையில் சாவியை கொடுத்தது போல், தி.மு.க., கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டோமே' என, தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, ஸ்டாலின் அரசு தவறுவதும், குற்றச் செயல்களில் தி.மு.க.,-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
ஏற்கனவே, நரியம்பட்டு ஊராட்சி மன்ற பெண் தலைவர் மீது, பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்தால் தானே, அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, தி.மு.க.,வின் கொள்கையான 'கமிஷன்-, கலெக் ஷன்-, கரப்ஷனை' முறையாக செயல்படுத்த முடியும்?
'இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி, தமிழகத்தில் நடத்தும் ஆட்சி, இனியும் தேவையா?' இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.