மைசூரு தசராவை முஸ்லிம் பெண் துவக்குவதா? பா.ஜ., ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் சர்ச்சை
மைசூரு தசராவை முஸ்லிம் பெண் துவக்குவதா? பா.ஜ., ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் சர்ச்சை
ADDED : ஆக 26, 2025 03:33 AM

பெங்களூரு: நடப்பாண்டு மைசூரு தசராவை, 'புக்கர்' விருது பெற்ற பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைக்க, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் மைசூரு தசராவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் சாமுண்டி மலையில் நடக்கும் விழாவை, புகழ் பெற்ற சாதனையாளர் துவக்கி வைப்பது வழக்கம்.
இந்தாண்டு மைசூரு தசரா விழா, செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
'நடப்பாண்டு விழாவை, 'புக்கர்' பரிசு பெற்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைப்பார்' என, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2023ல் நடந்த மக்கள் சாகித்ய சம்மேளன கூட்டத்தில் பேசிய பானு முஷ்டாக், 'கன்னடத்தை மொழியாக ஏற்காமல், எங்கள் வீட்டில் கன்னடம் பேச முடியாமல் செய்து விட்டீர்கள்.
'கன்னட மொழியை, கன்னட புவனேஸ்வரி தாயாக மாற்றி விட்டீர்கள். கன்னடத்துக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, புவனேஸ்வரியாக மாற்றி விட்டீர்கள்' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
ஹிந்து பாரம்பரியம், ஹிந்து பழக்க வழக்கங்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு பானு முஷ்டாக் வந்தால் வரவேற்போம். புக்கர் பரிசு, பானு முஷ்டாக்கிற்கும், அவரது புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தீபா பஸ்திக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், தசரா துவக்க விழாவுக்கு, பானு முஷ்டாக்கிற்கு மட்டும் அழைப்பு விடுத்த முதல்வர் சித்தராமையா, தீபா பஸ்திக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?
தசரா என்பது மத மரபுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி. முதல்வர் சித்தராமையா, திப்பு சுல்தான் மனநிலை கொண்டவர். எனவே தான் பானு முஷ்டாக்கிற்கு மட்டும் அழைப்பு விடுத்து உள்ளார்.
முஸ்லிம்கள் மத்தியில் சிலை வழிபாட்டுக்கு தடை உள்ளது. பானு முஷ்டாக் வழிபட்டால், அவரது சொந்த மதத்தினரே அவரை எதிர்ப்பர். அவரை அம்மதத்தில் இருந்து வெளியேற்றினால், அவர்கள் என்ன செய்வர்?
ஹிந்துக்களை எதிர்க்கும் பானு முஷ்டாக், ஏன் சாமுண்டீஸ்வரியை வணங்க வேண்டும்? ஹிந்து மதத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கர்நாடக காங்., அரசு செயல்படுகிறது. இவ்வாறு கூறினர்.
மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''தசரா தேசிய பண்டிகை. மதம், ஜாதிகளுக்கு உட்பட்டது அல்ல. சர் மிர்சா இஸ்மாயில் மைசூரு திவானாக இருந்தபோது, தசரா கொண்டாடவில்லையா?
''இதில் எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது. அன்னை சாமுண்டீஸ்வரியை நம்புவதா, இல்லையா என்பதை துவக்கி வைப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
மன்னர் குடும்பம் ஆதரவு தசரா விழாவை துவக்கி வைக்க, பானு முஷ்டாக்கை தேர்வு செய்த மாநில அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. முஸ்லிம் பெண்கள் சம உரிமை பெறவும், மசூதிக்கு செல்லும் வாய்ப்புக்காகவும் அவர் போராடி வருகிறார். கன்னட மொழி, இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அதை நாங்கள் மதிக்கிறோம். -யதுவீர், மைசூரு பா.ஜ., - எம்.பி.,