பெண் இன்ஜினியர் தற்கொலை மூத்த அதிகாரிகள் இருவர் கைது
பெண் இன்ஜினியர் தற்கொலை மூத்த அதிகாரிகள் இருவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 01:16 AM

குவஹாத்தி: அசாமில் பொதுப்பணி துறை பெண் இன்ஜினியரை, தற்கொலைக்கு துாண்டியதாக மூத்த அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் பங்கைகன் பகுதியில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தில் ஜோதிஷா தாஸ், 29, என்பவர் உதவி இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஜோதிஷா வீட்டில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். ஜோதிஷா உடலை மீட்ட போலீசார், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
நான் தற்கொலை செய்ய, என்னுடன் பணியாற்றும் மூத்த இன்ஜினியர்கள் தினேஷ் மேதி சர்மா, அமினுல் இஸ்லாம் ஆகிய இருவரே காரணம்.
அவர்கள் இருவரும், பொதுப்பணி துறையில் பணி முடியாத வேலைக்கு போலி பில் தயாரித்து அதற்கான தொகையை அனுமதிக்க கோரி என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜோதிஷாவை தற்கொலைக்கு துாண்டியதாக தினேஷ் மற்றும் அமினுல் ஆகிய இரு இன்ஜினியர்களையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.