ADDED : ஆக 30, 2025 02:14 AM
லக்னோ : தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோவுக்கு விமானத்தில், 24 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோவுக்கு, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானத்தில் வரும் பயணியர் கஞ்சா கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த இரு பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அதில் இருந்த, 23.935 கிலோ 'ஹைட்ரோபோனிக்' வகை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 24 கோடி ரூபாய். இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த இரு பயணியரையும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்த அதிகாரிகள் லக்னோ போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கின்றனர்.