கோவில் பணத்தில் கல்விக்கூடம்: உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி
கோவில் பணத்தில் கல்விக்கூடம்: உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி
ADDED : ஆக 30, 2025 02:23 AM

'கோவில் பணத்தை கல்விக்காக செலவு செய்வதில் தவறு இல்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கல்லுாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கை தாக்கல் செய்ய நீங்கள் யார்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ரமேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பக்தர் என்ற முறையில் தான் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மேலும் கல்லுாரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கபாலீஸ்வரர் கோவிலுக்கு கீழ் வரக்கூடிய கொளத்துார் சோமநாதர் ஆலயத்தின் இடம். கல்லுாரி கட்டுவதற்கு கோவில் நிதியையும் பயன்படுத்துகின்றனர். எனவே அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, வாதிட்டார்.
அப்போது, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ''கோவில் நிலத்தில் கல்லுாரி கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இதற்கான வாடகையாக 3.19 லட்சம் ரூபாயை ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு வழங்கி வருகிறது.
''முறைப்படி குழு அமைத்து இந்த வாடகை தொகை, முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது தான். இதை, சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ''எனவே, கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, இலவசமாக அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது,'' என, வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், 'மாணவர்களின் எதிர்காலத்திற்காக கல்லுாரி அமைக்க ஹிந்து அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது; இதில் தவறு இல்லை. கோவில் பணத்தில் கல்விக்கு செலவு செய்வதில் தவறு கிடையாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -