UPDATED : செப் 02, 2025 09:16 AM
ADDED : செப் 01, 2025 11:14 PM

'ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை, இப்போதே பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை நடந்த போது, 'அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதன் விபரம்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு எழுத விருப்பமில்லை என்றால், தாராளமாக அவர்கள் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறலாம்.அவர்கள், ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை பெற்று, இப்போதே கட்டாய பணி ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
டில்லி சிறப்பு நிருபர்