ரூ.500 கோடி வங்கி மோசடி: முன்னாள் எம்பி உள்பட 3 பேர் கைது
ரூ.500 கோடி வங்கி மோசடி: முன்னாள் எம்பி உள்பட 3 பேர் கைது
ADDED : செப் 17, 2025 10:35 PM

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடந்த ரூ.500 கோடி வங்கி மோசடியில் காங்கிரஸ் முன்னாள் எம்பி உள்ளிட்டோரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் காங்கிரஸ் முன்னாள் எம்பியும், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான குல்தீப்ராய் சர்மா மற்றும் வங்கி அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, மோசடி செய்ததாக புகார் கிளம்பியது. ரூ.500 கோடிக்கும் அதிகமான கடன்கள், தனிப்பட்ட ஆதாயங்களுக்காக திருப்பி விடப்பட்டன.
குல்தீப் ராய் சர்மா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளின் பிரத்யேக நலனுக்காக சுமார் ரூ.230 கோடி மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறையின் குற்ற மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு பல தனியார் நபர்கள் மற்றும் ஏஎன்எஸ்சிபிஎல் அதிகாரிகள் மீது பதிவு செய்த எப்ஐஆர் -ஐ அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணை அமைப்பின் கோல்கட்டா மண்டல அலுவலக அதிகாரிகள், முன்னதாக, குல்தீப் ராய் சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய போலி நிறுவனங்களை குறிவைத்து ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 21 இடங்களில் சோதனைகளை நடத்தினர்.
மேலும் நிதி திசைதிருப்பலைக் கண்டறிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள மூன்று இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
ஏஎன்எஸ்சிபிஎல் இன் நிர்வாக இயக்குநர் முருகன் மற்றும் கடன் அதிகாரி கலைவாணன் ஆகியோர் மோசடியாக கடன்களைப் பெற்றதாகவும், 5 சதவீத கமிஷனுக்கு ஈடாக கூட்டாளிகளுக்கு கடன்களை எளிதாக்கியதாகவும் சான்றுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பணமாக வசூலிக்கப்பட்டதாகவோ அல்லது போலி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டதாகவோ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குல்தீப் ராய் சர்மா, நிர்வாக இயக்குநர் முருகன் மற்றும் கடன் அதிகாரி கலைவாணன் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது.
பணமோசடி தடுப்புச் சட்டம் , 2002 இன் விதிகளின் கீழ் இன்று கைது செய்யப்பட்டன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் குல்தீப் ராய் சர்மா மற்றும் கலைவாணனை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல் நபர்கள் இவர்கள்தான்.