ADDED : செப் 17, 2025 10:01 PM

புதுடில்லி: '' மக்கள் காட்டிய அன்பை கண்டு பிரமித்துப்போனேன். இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று( செப்., 17) 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதிலும் எண்ணற்ற மக்கள் பிரதமருக்கு சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் சக்திக்கு நன்றி. நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த எண்ணற்ற வாழ்த்துகள், ஆசிர்வாதங்கள் மற்றும் அன்பு செய்திகளால் நான் உண்மையிலேயே பிரமித்து போனேன். இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது. இதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
நாடு முழுவதும் ஏராளமானோர் எண்ணற்ற சமூக சேவை திட்டங்களை செய்து வருகின்றனர். இன்னும் பல திட்டங்கள் வரும் காலங்களில் தொடர உள்ளன. நம் மக்களிடம் இருக்கும் உள்ளார்ந்த இந்த நன்மை நம் சமூகத்தை நிலைநிறுத்துகிறது. நம்பிக்கையுடனும், நேர்மறையுடனும் அனைத்து சவால்களையும் சமாளிக்க நமக்கு தைரியத்தை அளிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளை முன்னின்று செய்பவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
நீங்கள் என் மீது வைத்து இருக்கும் எண்ணற்ற விருப்பங்களும், நம்பிக்கையும் மிகுந்த பலத்தை தருகின்றன. அவற்றை எனக்கு மட்டும் அல்லாமல், சிறந்த இந்தியாவை உருவாக்க நாம் இணைந்து செய்யும் பணிக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்க இன்னும் அதிக ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்ற நான் உறுதி பூண்டுள்ளேன்.
வாழ்த்துகளுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியவில்லை ஆனால், நான் மீண்டும் கூறுகிறேன். மக்களின் அன்பு என் இதயத்தை ஆழமாக தொட்டுள்ளது. அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.