நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ADDED : செப் 17, 2025 09:44 PM

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை திஷா பதானி. அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வீடு உள்ளது. கடந்த 12ம் தேதி அவரது வீட்டில் ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோர் குறித்து திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி தெரிவித்த கருத்துக்களால் இது நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. தாங்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என ரோகித் கோல்டி பிரார் குரூப் அதற்கு பொறுப்பேற்று இருந்தது.
குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவர். மேஜர் ஆக இருந்தவர். அதேபோல, திஷா பதானியின் தந்தை ஜெக்தீஷ் பதானி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாவார்.
இந்த சம்பவம் தொடர்பாகன பரேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேவேளையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஜெக்தீஷ பதானியிடம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தொலைபேசியில் பேசினார்.
இதையடுத்து, டில்லி போலீசார், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா சிறப்பு போலீஸ் படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காசியாபாத் அருகே திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவரும் காயமடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொல்லப்பட்டவர்கள் ரவீந்திரா மற்றும் அருண் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.