சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; 5 பெண் நக்சல் உட்பட 12 பேர் சரண்!
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; 5 பெண் நக்சல் உட்பட 12 பேர் சரண்!
ADDED : செப் 17, 2025 09:13 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
12 பேர் சரண்!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், 5 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 12 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் 9 பேருக்கு மொத்தம் ரூ. 18 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசாங்கத்தின் கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை நக்சலைட்டுகள் 177 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.