ரூ. 60,000 கோடி உடனே விடுவிக்க பிரதமருக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்... வெள்ளத்தால் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர் நாசமானதாக விளக்கம்
ரூ. 60,000 கோடி உடனே விடுவிக்க பிரதமருக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்... வெள்ளத்தால் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர் நாசமானதாக விளக்கம்
UPDATED : ஆக 31, 2025 09:32 PM
ADDED : ஆக 31, 2025 09:31 PM

சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மாநிலங்களுக்கான நிதியில் இருந்து, 60,000 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடிதம் அனுப்பியுள்ளார்.
![]() |
டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில், பஞ்சாப், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விளைநிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்து போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அனுப்பியுள்ள கடிதம்:
பஞ்சாப் மாநிலத்தில் கனமழை பெய்து ஆயிரக்கணக்கான கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் முற்றிலும் நாசம் அடைந்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு- - காஷ்மீரின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பஞ்சாப் மாநில கிராமங்கள் மூழ்கியுள்ளன.
பஞ்சாப் மாநிலம் கடுமையான வெள்ளப் பேரிடரில் சிக்கித் தவிக்கிறது. அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குர்தாஸ்பூர், கபுர்தலா, அமிர்தசரஸ், பதான்கோட், பெரோஸ்பூர், பாசில்கா மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய ஏழு மாவட்டங்கள் கடும் வெள்ளப்பாதிப்பை சந்தித்துள்ளன.
கனமழை கொட்டித் தீர்ப்பதால், வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இப்போது வரை, மூன்று லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள்
அறுவடைக்கு சில வாரங்களுக்களே இருக்கும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனால், விவசாயிகள் வீடுகளை இழந்தது மட்டுமின்றி வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 50,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாநிலங்களுக்கான நிதியில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு தர வேண்டிய, நிலுவையில் உள்ள 60,000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும்,
மாநில பேரிடர் மீட்பு நிதியில் விதிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும்.
அதேபோல, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதாலும், வாட் வரியிலிருந்து மாறியதாலும் பஞ்சாப் அரசுக்கு 49,727 கோடி நிரந்தர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அற்கு மத்திய அரசு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கவில்லை. மேலும், சில ஆண்டுகளாக கிராமப்புற மேம்பாட்டு நிதி மற்றும் மண்டி மேம்பாட்டு நிதி குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஞ்சாபில் சமீபத்தில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. அதனால், 828 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் பஞ்சாப் மாநில கிராமப்புற வளர்ச்சி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநிலத்துக்கான அனைத்து நிதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும்.