ADDED : ஆக 31, 2025 09:29 PM
புதுடில்லி:வடமேற்கு டில்லி வஜிர்பூரில் காணாமல் இரண்டு சிறுவர்களின் உடல்கள் ஜெ.ஜெ.காலனி கால்வாயில் மீட்கப்பட்டன.
வஜிர்பூர் ஜெ.ஜெ. காலனியில் வசித்த வைபவ், 11 மற்றும் யாஷ், 12, ஆகிய இருவரும் ஆறாம் வகுப்பு படித்தனர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன் தினம் மாலை 6:00 மணிக்கு காணாமல் போயினர்.
பெற்றோர் கொடுத்த புகார்படி, பாரத் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். தனிப்படை போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், வஜீர்பூர் ஜெ.ஜெ.காலனி கால்வாயில் இரண்டு சிறுவர்கள் உடல்கள் மிதப்பதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று, நீச்சல் வீரர்கள் உதவியுடன் இரண்டு உடல்களையும் மீட்டனர். காணாமல் போன வைபவ், யாஷ் ஆகியோரின் உடல்கள் என்பதை பெற்றோர் உறுதி செய்தனர்.
இருவரின் செருப்புகள் கால்வாய் கரையில் மீட்கப்பட்டன. கால்வாய் 20 அடி ஆழம் இருப்பதால், குளிக்கும் போது மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரு உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருவரது பெற்றோரும் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் வஜிர்பூர் ஜெ.ஜெ.காலனிவாசிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.