உள்நாட்டு பொருட்களை ஊக்குவித்தல் அவசியம்; வரி விவகாரத்தில் மோகன் பகவத் வலியுறுத்தல்
உள்நாட்டு பொருட்களை ஊக்குவித்தல் அவசியம்; வரி விவகாரத்தில் மோகன் பகவத் வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2025 10:26 PM

புதுடில்லி: நாடுகளுக்கு இடையே எந்தவித அழுத்தமும் இல்லாத வர்த்தகம் தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். மேலும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீதம் வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நாடுகளுக்கு இடையே எந்தவித அழுத்தமும் இல்லாத வர்த்தகம் தேவை என்று வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸின் 100 ஆண்டுகள் நிறைவு நாளையொட்டி, 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் அவர் கூறியிருப்பதாவது; அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டும். மற்ற அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
சர்வதேச வர்த்தகம் தொடர வேண்டும். ஆனால், அது அழுத்தம் இல்லாமலும், தன்னார்வத்துடனும் நடத்தப்பட வேண்டும். அதனால்தான் நாம் உள்நாட்டு பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் வணிகக் கொள்கை கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல, தன்னார்வ ஒத்துழைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
சுதேசியாக இருப்பது என்பது இறக்குமதியை நிறுத்துவது அல்ல. உலகம் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால் நகர்கிறது. எனவே ஏற்றுமதி,இறக்குமதி தொடர வேண்டும். இருப்பினும், அதில் எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது.
சுதேசி என்பது வெளிநாட்டு பொருட்களை முழுமையாக நிராகரிப்பது அல்ல. மக்களை உள்நாட்டு மற்றும் கிராமப்புறங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு பழக்க வேண்டும். நாம் வீட்டில் எலுமிச்சைப் பழ ஜூஸ் தயாரிக்க முடிந்தால், கோகா-கோலாவை ஏன் வாங்க வேண்டும்? வெளியில் இருந்து பொருட்களைக் கொண்டு வருவது உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கிறது. உங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் எதையும் வெளியில் இருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது, நம் நாட்டில் தயாரிக்கப்படாததைத் தான் நாம் இறக்குமதி செய்வோம், எனக் கூறினார்.