கவர்னர் உத்தரவை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றம் செப்., 3ல் விசாரணை
கவர்னர் உத்தரவை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றம் செப்., 3ல் விசாரணை
ADDED : ஆக 27, 2025 10:26 PM

புதுடில்லி:போலீஸ் அதிகாரிகள் ஸ்டேஷனில் இருந்தே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சாட்சியம் அளிக்கலாம் என்ற டில்லி துணைநிலை கவர்னரின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை செப்.,3க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகள், ஸ்டேஷனில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சாட்சியம் அளிக்கலாம் என துணைநிலை கவர்னர் சக்சேனா, 13ம் தேதி உத்தரவிட்டார்.
கவர்னரின் இந்த உத்தரவுக்கு டில்லியில் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 22ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லி உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும், கவர்னர் தன் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், டில்லி துணைநிலை கவர்னரின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தர விட்டனர்.