கைதானவர் சொல்வதெல்லாம் உண்மை: மகேஷ் திம்மரோடி ஆதரவாளர் உறுதி
கைதானவர் சொல்வதெல்லாம் உண்மை: மகேஷ் திம்மரோடி ஆதரவாளர் உறுதி
UPDATED : ஆக 28, 2025 02:35 AM
ADDED : ஆக 27, 2025 11:58 PM

பெங்களூரு: 'தர்மஸ்தலா விவகாரத்தில் கைதாகியுள்ள சின்னையா சொல்வது அனைத்தும் உண்மை' என, ஹிந்து இயக்க பிரமுகர் மகேஷ் திம்மரோடியின் ஆதரவாளர் கிரிஷ் மட்டன்னவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த, மாண்டியாவின் சிக்கனப்பள்ளி கிராமத்தின் சின்னையாவை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, அவரது குழுவினர் கூறியதால் பொய் புகார் அளித்ததாக எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன் சின்னையா தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மகேஷ் திம்மரோடி வீட்டில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதிய வழக்கு
இந்த சோதனையில் சின்னையாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள், அவரது உடைகள் சிக்கின.
இவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மகேஷ் திம்மரோடி தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் வழங்க, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மகேஷ் திம்மரோடி வீட்டில் சின்னையா தங்கி இருந்தபோது, சில யு - டியூப் சேனல் களுக்கு பேட்டி அளித்ததும் தெரிய வந்துள்ளது.
எஸ்.ஐ.டி., விசாரணையின் போது சின்னையா அப்ரூவராக மாறினால், சின்னையாவை பற்றி எப்படி அவதுாறு பரப்ப வேண்டும் என்று மகேஷ் திம்மரோடி, அவரது குழுவினர் 25க்கும் மேற்பட்ட, வீடியோக்களை தயாரித்து வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மகேஷ் திம்மரோடியின் தீவிர ஆதரவாளரும், சமூக ஆர்வலருமான கிரிஷ் மட்டன்னவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ:
சின்னையாவின் குடும்பத்திற்கு எஸ்.ஐ.டி., பாதுகாப்பு அளித்து இருந்தால், இந்நேரம் தர்மஸ்தலாவில் பல உடல்கள் கிடைத்து இருக்கும்.
குடும்பத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில், உடல்களை புதைத்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடங்களை சின்னையா காட்டி உள்ளார். தர்மஸ்தலாவில் அவர், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்தது நிஜம்.
மகேஷ் திம்மரோடி வீட்டில் தான் சின்னையா தங்கி உள்ளார் என்பது எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு முன்பே தெரியும். சின்னையாவிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், 'உன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், யார் நம்பருக்கு அழைப்பது' என்று கேட்ட போது, சின்னையா என் மொபைல் நம்பரை கொடுத்தார்.
'தர்மஸ்தலாவில் நடந்த அநியாயத்தை வெளியே கொண்டு வர உதவுங்கள்' என்று மகேஷ் திம்மரோடியிடம், சின்னையா கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தார்.
போலி ஹிந்துக்கள்
நியாயம் கிடைக்க போராடும் நாங்கள், நேர்மையான வக்கீல்களை தேடி அலைந்தோம். தற்போது எஸ்.ஐ.டி., விசாரணை நடப்பதால், உண்மையை சின்னையா வெளியே கூறினார். நாங்கள் சின்னையாவுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
தர்மஸ்தலா வழக்கில் வீரேந்திர ஹெக்டே குடும்பத்திற்கு ஆதரவாக பேசும் பா.ஜ., தலைவர்கள் போலி ஹிந்துக்கள். விஜயேந்திரா இளம் தலைவராக உள்ளார். அவர் இன்னும் அரசியலில் வளர வேண்டும்.
அவரது தந்தை எடியூரப்பா தலைமையில், நாங்கள் ஹிந்துத்துவாவை வளர்க்க போராடினோம். ஆனால் விஜயேந்திரா, வீரேந்திர ஹெக்டே குடும்பத்திற்கு ஆதரவாக பேசுகிறார். ஒரு நாள் உண்மை வெளியே வரும் போது, அதற்கு பதில் சொல்ல விஜயேந்திரா தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.