போலி ஆவணங்கள் வாயிலாக கடன்: வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு சிறை
போலி ஆவணங்கள் வாயிலாக கடன்: வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு சிறை
ADDED : ஆக 28, 2025 12:46 AM

சென்னை:போலி ஆவணங்கள் வாயிலாக, பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், வங்கி அதிகாரிகள் உட்பட மூவருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில், ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன்.
மோசடி இவர், தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர். 1988 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில், பல கோடி ரூபாய் கடன் பெற்றது.
போலி ஆவணங்கள் வாயிலாக, இந்த கடன்களை பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில், மோசடி நடந்தது உண்மை என தெரியவந்தது.
வங்கி அதிகாரிகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தங்கள் அதிகார வரம்பை விடவும், உத்தரவாதமாக அளித்த ஆவணங்களின் மதிப்பை விடவும், அதிகளவில் கடன் பெற அனுமதித்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் என ஒன்பது பேர் மீது, 1996ம் ஆண்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
சென்னையில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மீதும், 2000ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது; 2003ல், வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
28 ஆண்டுகள் இதையடுத்து, உயிரிழந்த நான்கு பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.
மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை, சென்னை 11வது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு முன் நடந்தது.
விசாரித்த நீதிபதி, வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கடந்த, 28 ஆண்டுகளாக நடந்த வழக்கில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.