ADDED : ஆக 27, 2025 11:54 PM

ஷிவமொக்கா: கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்த, சிக்கந்துாரில் உள்ள லிங்கனமக்கி அணையில் நீர் விமான போக்குவரத்து துவங்க, விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், சிக்கந்துாரில் லிங்கனமக்கி அணை உள்ளது. இதன் நீர்த்தேக்க பகுதியில் பிரபலமான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு படகுகள் மூலம் பக்தர்கள் சென்று வந்தனர்.
அணையில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது, பல கி.மீ., சுற்றி கோவிலுக்கு சென்று வந்தனர். பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஷிவமொக்கா எம்.பி.,யாக இருந்தபோது எடுத்த முயற்சியால், லிங்கனமக்கி அணை நீர்த்தேக்க பகுதியில், நாட்டின் இரண்டாவது பெரிய கேபிள் மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த மாதம் தான் திறக்கப்பட்டது.
தற்போது, விமான போக்குவரத்து அமைச்சகம், கர்நாடகாவில் நீர் விமான போக்குவரத்தை துவக்கி, சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மத்திய அரசின் 'உதான்' திட்டத்தின் கீழ், லிங்கனமக்கி அணை, உடுப்பியின் பைந்துார், மல்பே, கடற்கரைகள், உத்தர கன்னடாவின் கணேஷ்குடி கடற்கரை, கார்வாரின் காளி நதி, மைசூரின் கபினி அணை ஆகிய பகுதிகளில் நீர் விமான போக்குவரத்து துவங்க அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவற்றில், சில இடங்களில் நீர் விமான போக்குவரத்துக்கான டெண்டர் அழைக்கப்பட்டு உள்ளது. அது போன்று, லிங்கனமக்கி அணையிலும் நீர் விமான போக்குவரத்து துவங்குவதற்கு விரைவில் டெண்டர் அழைக்கப்பட உள்ளது.
தண்ணீரில் மிதந்தபடி மேலெழும்பி, தண்ணீரில் இறங்கக்கூடிய விமானங்கள், நீர் விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன.