பிரதமர் மோடியின் படிப்பு விபரங்கள் தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து
பிரதமர் மோடியின் படிப்பு விபரங்கள் தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து
ADDED : ஆக 26, 2025 03:19 AM
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடும்படி, டில்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
டில்லி பல்கலையில், 1978ல் பி.ஏ., இளங்கலை பட்டப்படிப்பை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
அந்த ஆண்டில், பி.ஏ., தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் விபரங்களை வெளியிட டில்லி பல்கலைக்கு உத்தரவிடக் கோரி, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தில், சமூக ஆர்வலர் நீரஜ் சர்மா என்பவர், 2016ல், மத்திய தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.
இதை ஏற்ற ஆணையம், அவர் கோரிய தகவல்களை வெளியிடும்படி டில்லி பல்கலைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 2017 ஜனவரியில், டில்லி உயர் நீதிமன்றத்தில், டில்லி பல்கலை மனு தாக்கல் செய்தது. இதை தனி நீதிபதி சச்சின் தத்தா விசாரித்தார்.
விசாரணையின் போது, டில்லி பல்கலை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '1978-ல் பெறப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ் விபரங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் முகம் தெரியாத நபர்களிடம் வழங்க முடியாது.
'சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் செயல்படும் நபர்களால் ஆர்.டி.ஐ., சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் தகவல்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவை; தனிப்பட்ட உரிமை. எனவே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரியில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, ''கல்வி விபரங்கள் என்பது அரசு பதவியில் இருப்பவர் களுக்கு தனிப்பட்ட தகவல்கள் போன்றது.
''அவற்றை வெளியிடுவதில் எந்த பொது நலனும் இல்லை,'' என குறிப்பிட்டு, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார்.