ADDED : ஆக 26, 2025 03:19 AM

தமிழகம் முழுதும், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
தமிழகம் முழுதும், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள், ஜாதி மற்றும் மத அமைப்புகள், பல்வேறு சங்கங்களின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பதில் அளிக்க, தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கதிரவன் என்பவர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவை, கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பி டத்தக்கது.
- டில்லி சிறப்பு நிருபர் -