மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 21, 2025 01:45 AM

'கால வரைமுறை இல்லாமல் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 'கவர்னர் என்பவர் தபால்காரர் அல்ல' என மத்திய அரசும் காரசார வாதங்களை முன் வைத்துள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'மசோதாக்கள் மீது கவர்னர்கள் ஒரு மாதத்திற்குள்ளும், ஜனாதிபதி மூன்று மாதத்திற்குள்ளும் முடிவெடுக்க வேண்டும்' என காலக்கெடு விதித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பினார். இதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்றைய தினம் இரண்டாவது நாள் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'ஒரு மசோதாவை சட்டசபை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர கவர்னருக்கு வேறு வழி கிடையாது.
ஆனால், அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, மசோதாக்கள் மீது கால வரம்பின்றி முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 'இந்திய அரசு சட்டப்பிரிவு 75ன் கீழ், திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு கவர்னருக்கு திருப்பி அனுப்பப்படும் போது, அதற்கு கட்டாயமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது இல்லை. அது தொடர்பாக சட்டத்தில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
'கவர்னர் ஒரு மசோதாவை மறுபரிசீலனைக்காக அனுப்பி வைத்தால், சட்டசபை தான் ஆறு மாதத்திற்குள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே தவிர, அதை இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வரம்பு கவர்னருக்கு கிடையாது' என வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மசோதாவை நிறுத்தி வைப்பது என்றால் என்ன அர்த்தம்? மசோதாக்களுக்கு ஒப்புதலும் தர மாட்டார்; திருப்பி அனுப்பவும் மாட்டார். அவரிடமே வைத்துக் கொள்வார் என்றால் எவ்வளவு காலத்திற்கு அப்படி வைக்க முடியும்? மசோதா மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை அரசிடம் தெரிவிப்பது கவர்னரின் கடமை' என்றனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், 'மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதால், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விட எந்த வகையிலும் கவர்னர் குறைவானவர் அல்ல.
அரசியலமைப்பின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் முழுமையான அதிகாரத்தை பறிக்கும் வகையில் யாரும் எதையும் செய்ய வேண்டாம்.
கவர்னர் என்பவர் தன் ஞானத்தை பயன்படுத்தி செயல்படக்கூடியவர். அவரை தபால்காரர் போல் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல' என வாதிட்டார். வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -