எருமைகள் வாங்கி தருவதாக கூறி சினிமா இயக்குநரிடம் மோசடி
எருமைகள் வாங்கி தருவதாக கூறி சினிமா இயக்குநரிடம் மோசடி
ADDED : ஆக 21, 2025 01:43 AM

பெங்களூரு :எருமை மாடுகள் வாங்கி தருவதாக நம்ப வைத்து, கன்னட திரைப்பட இயக்குநர் பிரேமிடம், 4.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த குஜராத் நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் பிரேம். இவர், சொந்தமாக பால் உற்பத்தி செய்ய விரும்பினார். முதற்கட்டமாக இரண்டு எருமைகள் வாங்க நினைத்தார். இதையறிந்த குஜராத்தை சேர்ந்த வனராஜ் பாய் என்பவர், சில நாட்களுக்கு முன், இயக்குநர் பிரேமை தொடர்பு கொண்டு நல்ல எருமைகள் வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய பிரேம், 25,000 ரூபாய் முன்பணம் கொடுத்தார். சில நாட்களுக்கு பின், 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பு வழியாக, இரண்டு எருமை மாடுகளை காட்டிய வனராஜ், 'பிடித்துள்ளதா' என கேட்டார். எருமைகள் நன்றாக இருந்ததால், அவற்றை வாங்கி வரும்படி கூறி, ஆன்லைன் வழியாக, 4.50 லட்சம் ரூபாய் அனுப்பினார்.
எருமைகளுடன் வருவதாக கூறிய வனராஜ் பாய், பணத்துடன் கம்பி நீட்டினார். எருமைகளும் வரவில்லை; பணமும் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரேம், பெங்களூரின் சந்திரா லே - அவுட் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.
பிரேம், மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின் பெசகரஹள்ளியில், 10 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வாங்கியுள்ளார். இதற்கு, 'அம்மாவின் தோட்டம்' என, பெயர் சூட்டியுள்ளார். இங்கு பசுக்கள் வளர்க்கிறார். குஜராத்தில் இருந்து, எருமைகள் வாங்கி வளர்க்க விரும்பினார். இதற்காக பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்.