'ஆன்லைன்' சூதாட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் முதல் வழக்கு
'ஆன்லைன்' சூதாட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் முதல் வழக்கு
ADDED : ஆக 29, 2025 12:40 AM

பெங்களூரு: 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும், 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா பார்லிமென்டின் இரு சபைகளிலும் சமீபத்தில் நிறைவேறியது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த மசோதா சட்டமாக மாறியது.
இதன்படி, ஆன்லைனில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களில் ஒன்றான 'ஏ23' கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
முன்னணி ஆன்லைன் கேமிங் நிறுவனமான, 'ஏ23'ல் 7 கோடி பேர் விளையாடுகின்றனர். சட்ட அனுமதி பெற்று, இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை சட்டத்தால், எங்கள் விளையாட்டு கடும் பாதிப்பை சந்தித்துஉள்ளது. இதனால், எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆகையால், ரம்மி, போக்கர் போன்ற திறன் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.