மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் 2027ல் சேவை துவங்குகிறது
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் 2027ல் சேவை துவங்குகிறது
ADDED : ஆக 29, 2025 12:37 AM

மும்பை: 'மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை, வரும் 2027ல் துவங்கும்' என, ஜப்பான் நாட்டுக்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, 2015ல் அறிவித்தார்.
எதிர்பார்ப்பு இதையடுத்து, 2017, செப்.,ல் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகளாக இதன் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ஜப்பானிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும், இந்த புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய். மும்பை - ஆமதாபாத் இடையேயான 508 கி.மீ., துாரத்துக்கு அதிநவீன ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழித்தடத்தில், 12 ரயில்வே ஸ்டேஷன்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பிரமாண்டமாக நிறைவேற்றப்பட்டு வரும் இந்த திட்டத்தில், ரயில் சேவை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் 2027ல் ரயில் சேவை துவங்கும் என, ஜப்பான் நாட்டுக்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
டில்லியில் இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
நம் நாட்டின் உள்கட்டமைப்பு விவகாரத்தில், ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ரயில் சேவையில் அந்நாட்டின் பங்கு அளப்பரியது.
கடந்த 2014ல் பிரதமர் மோடியும், அப்போதைய பிரதமர் ஷின்சா அபேயும், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதில் ஒன்று புல்லட் ரயில் சேவை திட்டம்.
மும்பை - ஆமதாபாத் அதிவேக புல்லட் ரயில் சேவை பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வரும் 2027ல் ரயில் சேவை துவங்கும்.
சோதனை ஓட்டம் இதற்காக, ஜப்பானில் 'இ - 5' மற்றும் 'இ - 3' ஷின்கான்சென் ரயில்கள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியவை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில், நாளை நடக்கவுள்ள இந்திய - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த சூழலில், புல்லட் ரயில் சேவை குறித்து துாதர் சிபி ஜார்ஜ் கருத்துகள் வெளியாகியுள்ளன.