/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்
/
மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்
மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்
மூடிய கதவுகள் திறக்க வழியுண்டா? ஸ்டெர்லைட் காப்பர் விவாதத்தில் ஒரு புதிய திருப்பம்
PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

துாத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, சமீபகாலம் வரை, மூடிய அத்தியாயமாக தோன்றியது. ஆனால் இன்று இந்தக் கடலோர நகரத்தின் சூழல் மாற்றம் கண்டு வருவதாகத் தெரிகிறது. மக்களின் மனக்குமுறல் மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
இரண்டு முக்கிய முன்னேற்றங்கள்
முதலாவதாக, தமிழக முதல்வர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் நிபுணர் குழு கடந்த மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், மேம்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புகளின் கீழ், ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலையை மீண்டும் திறக்க, ஒரு கட்டமைப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பத்மஸ்ரீ விருது பெற்ற, பேராசிரியர் ஜி.டி.யாதவ், மும்பை, 'இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி' கல்வியகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றியவர்.
குழுவின் இரண்டாம் உறுப்பினரான பேராசிரியர் ஆர்.நாகேந்திரன், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசியராகவும், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் நிபுணராகவும் பணிபுரிந்தவர். இவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அறிக்கை, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, 'பசுமை' அடிப்படையில் மறுதொடக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்பதை சுட்டி காட்டுகிறது.
இந்த அறிக்கை, 30 சதவீதம் செப்பு மறுசுழற்சியை உள்ளடக்கிய, ஒரு கலப்பின உற்பத்தி மாதிரியை பரிந்துரைக்கிறது. இதில், கசடு வெளியேற்றம் 15 சதவீதம்ஆகவும், அபாயகரமான கழிவுகள் 40 சதவீதம் ஆகவும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது. இதன் அடிப்படை நோக்கம், தொழில் துறையில் ஒரு நிலையான நீடித்த அணுகுமுறையே தவிர, கடந்த கால உற்பத்தி முறைகளை மீண்டும் கடைபிடிப்பதற்கல்ல.
இரண்டாவதாக, 2025 ஜூலை 21 அன்று, ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள், - துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றுகூடி, ஸ்டெர்லைட் உருக்காலையை மீண்டும் திறக்க கோரிக்கையிட்டனர்.
நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின்படி ஒப்பந்ததாரர்கள், போக்குவரத்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், மேற்கூறிய நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கைக்கு, ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், நகரத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு சாத்தியமான பாதையாகவும் பரிந்துரை அறிக்கை இருப்பதாக கருதினர்.
சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தில் 36 சதவீத பங்களிப்பை, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அளித்து வந்தது. தற்போது, ஆண்டிற்கு நான்கு லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட உருக்காலையின் பார்வை, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகக் கொள்கைக்கு திரும்புகிறது.
இரண்டாம் நிலையாகக் கருதப்பட்ட இந்தக் கொள்கை, இன்று பசுமை மற்றும் பழுப்புநிற தொழில் திட்டங்களின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் மையமாக உள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் 1997-ல், தேவையான அனைத்து ஒப்புதல்களுடன், அதாவது நிறுவ மற்றும் செயல்பட ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளுடன் செயல்படத் துவங்கியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதிக்கு, ஒரு குறிப்பிடத்தக்க தொழில் துறையின் நங்கூரமாக செயல்பட்டது. மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பையும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செழித்து வளரவும் துணை நின்றது. லாரி தொழில் மற்றும் பாஸ்போரிக் மற்றும் சல்பியூரிக் அமிலம் போன்ற தாமிரத்தின் துணைப்பொருட்களின் விநியோகமும், உள்ளூரில் செயல்பட்ட துணை தொழில்களை மேம்படுத்த ஸ்டெர்லைட் ஆலை துணை நின்றது.
சுற்றுச்சூழல் செயல்திறன்
நிறுவனங்களுக்கான அரசின் கூற்றுப்படி, ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றியது. இதில் ஆலையின் திரவ வெளியேற்றம், பூஜ்ஜியம் அளவு எனவும் சான்றளிக்கப்பட்டது. உமிழ்வு மற்றும் கழிவுகளை ஒழுங்குபடுத்த, தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகள் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆலை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.
நேர்மறையான சமூக தாக்கம்
ஸ்டெர்லைட் காப்பரின் சமூக நலத்திட்டங்களில் குடிநீர் வழங்கல், சுகாதார பராமரிப்பு, உதவித்தொகைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மீனவர்களுக்கான வாழ்வாதார ஆதரவு போன்ற திட்டங்களும் அடங்கும். இதில் பெரும்பாலான நலத்திட்டங்கள், 2018-ல் ஆலை மூடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்ததாக, நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆலை நிர்வாகத்தில் உள்ளூர் மக்கள்
ஒரு நிர்வாக கண்ணோட்டத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பொறுப்பு மற்றும் வழிமுறைகள், உரிய நிபுணர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பணியாளர்கள், துாத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து பணியமர்த்தப்பட்டனர். ஆலையின் தலைவர் உள்ளூர்க்காரர். அவர், பொறியாளர் பதவியில் துவங்கி தலைமை இயக்க அதிகாரி வரை பதவி உயர்வுகளை வகித்து வருகிறார். இது, நிறுவனத்தின் உள்ளூர் ஒருங்கிணைப்பை அடிக்கோட்டிற்கு காட்டுகிறது.
மாறிவரும் கருத்துகள்
ஆலை திறப்பு ஏன் திருப்புமுனையாக இருக்கலாம்? சமீபகால நடவடிக்கைகள் அல்லது முன்னேற்றங்கள் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. பொதுமக்களின் வேண்டுகோள் காரணமாக ஒரு காலத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, இப்போது திறப்பதற்கான கோரிக்கையாக ஏன் மாறியுள்ளது?
இது, வெறும் தற்காலிக மாற்றமா அல்லது ஆழமான பொருளாதார மற்றும் சமூக அடித்தளங்களின் கவலையை குறிக்கும் அறிகுறியா? வழக்கறிஞரான நான், துறைகளுக்கு இடையேயான சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக மதிப்பீடுகளில் பணியாற்றி, ஸ்டெர்லைட் காப்பர் வழக்கை கவனமாக பின்பற்றி, புறநிலைப் பகுப்பாய்வு மற்றும் உள்ளுர் உணர்வை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் புலனாய்வு தரவுகளை வழங்குகிறேன்:
* துாத்துக்குடியில் காற்று மற்றும் நீரின் தரம், ஆலை மூடப்பட்டதிலிருந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டவில்லை. எரிவாயு மற்றும் பட்டாசு ஆலைகள் உட்பட பிற உள்ளூர் தொழில்களில், தொழில் துறை விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இவற்றில், சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும், ஸ்டெர்லைட்டில் நடக்கவில்லை
* கடந்த, 2018ல் நடந்த சமூகப் போராட்டங்கள், ஆலையை மூட வழிவகுத்தாலும், ஆலை வழங்கிய நலத்திட்டங்களால் ஏற்பட்ட தாக்கத்தை ஈடுசெய்ய, மூடிய பின் சமூக ஆதரவு கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை
* ஸ்டெர்லைட்டின் துணைப்பொருட்களை நம்பியிருந்த தொழில்கள் இடம் பெயர்ந்து விட்டன. இதன் விளைவாக, வேலை இழப்புகள் மற்றும் உள்ளுர் தொழில் துறைக்கு முதலீடுகள் குறைந்தன.
* ஸ்டெர்லைட் விவகாரம் இனி, நீதிமன்றத்தின் விசாரணையில் இல்லாத நிலையில், மாநில அரசு இப்போது, சட்டக் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.
சமீபத்திய அமைதியான அணி திரட்டல்கள், பொதுமக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறிக்கின்றன. இது கவனத்தை ஈர்க்கிறது.
பங்குதாரர்களுக்கான பரிந்துரை
தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்களிடம் ஏற்படும் மனமாற்றங்கள், ஸ்டெர்லைட் காப்பர் இனி ஓரங்கட்டப்பட வேண்டிய ஒரு பிரச்னையல்ல என்பதை குறிக்கிறது. மீண்டும் ஆலையை திறப்பது பொது நலனுக்காக எனக் கருதப்பட்டால், தமிழக அரசு, அனைத்து பங்குதாரர்களுடனும், சமூக பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடனும் வெளிப்படையான அணுகுமுறையுடன் பேச்சில் ஈடுபட வேண்டும்.
சட்டப்பூர்வமாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும் முன்னேற்றத்திற்கான பாதையை ஆராய வேண்டும். நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் 'பசுமை மறுதொடக்கம்' குறித்த பரிந்துரைகளை, அரசு ஒரு கருத்தாக பெற வேண்டும்.
மத்திய அரசுக்கு வேண்டுகோள்
சூரிய சக்தி பேனல்கள், காற்றாலைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தாமிரம் ஒரு முக்கியமான உள்ளீடாக உள்ளது. உள்நாட்டு வினியோகம் தடைபட்டால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை இலக்குகள் சமரசம் செய்யப்படலாம்.
எதிர்க்கட்சிகளுக்கு அரசியலில் ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. தேசிய பாதுகாப்பு விஷயங்களில், எதிர்க்கட்சிகளின் ஈடுபாட்டை போலவே சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, எதிர்க்கட்சிகளுக்கு மிக முக்கிய அம்சம்.
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் - கட்சி எல்லைக்கு அப்பால் - சமூகத்தின் நீண்டகால நலன்களுக்கு வழிவகுக்கும் தீர்வுகளை கண்டறிய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல்,தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் உமிழ்வு கட்டுப்பாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகும் என்ற நிலைத்தன்மையை, ஸ்டெர்லைட் காப்பர் முன்கூட்டியே அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
மறு சீரமைப்பிற்கான காலம்
ஸ்டெர்லைட் காப்பர் மீண்டும் திறக்கப்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்பது வெறும் சொல்லாடலை பொறுத்ததல்ல. மாறாக, பங்குதாரர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை பொருளாதார எதார்த்தங்களுடன் சமநிலைப்படுத்த ஒத்துழைக்க முடியுமா என்பதைப் பொறுத்தது. இதற்கு நீண்டகால நிலைப்பாடுகளை உருவாக்க வேண்டும்.
கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை மற்றும் சமூக மக்கள் ஒருங்கிணைந்து, ஒரு உருக்காலையின் கதவுகளை திறப்பது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானோரின் நிலையான வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளையும் திறக்க முடியுமா என்பதுதான் இப்போது முக்கியம்.இரு துருவங்களை இணைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நல்லிணக்கம் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
- ஸ்ரீவர்தன் சின்ஹா -
'தேசாய் அண்டு திவான்ஜி' சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர். கட்டுரை தமிழாக்கம்: ஆர்.ரகுராமன்.