இன்று டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை
இன்று டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை
ADDED : செப் 18, 2025 02:40 AM
புதுடில்லி:டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவும், நாளை ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில், 2.75 லட்சம் மாணவ - மாணவியர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய அரசியலுக்கான துவக்கமாக கருதப்படும் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் இன்று நடக்கிறது. காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 3:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை என, இரண்டு ஷிப்டுகளா ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை நாளை காலை துவங்கி முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், 2.75 லட்சம் மாணவ - மாணவியர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு மாணவர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, டில்லி பல்கலை மற்று அதன் உறுப்புக் கல்லூரிகளில், 600 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
டில்லி வடக்கு மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் ராஜா பண்டியா கூறுகையில், “ஓட்டுப்பதிவு மையங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்தில் இன்று சிறப்புக் கவனம் செலுத்தப்படும். ஓட்டுப்போட தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே செல்லும் வகையில் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்,”என்றார்.
தலைமை தேர்தல் அதிகாரி ராஜ் கிஷோர் சர்மா கூறியதாவது:
போஸ்டர் லிங்டோ கமிட்டி வழிகாட்டுதல்படி இந்த ஆண்டு தேர்தலில் போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை சுவர்களில் ஒட்ட அனுமதிக்கவில்லை. அதனால், பல்கலை மற்றும் கல்லூரி வளாகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு மாணவர் சங்கங்கள் லிங்டோ கமிட்டி வழிகாட்டுதலை பின்பற்றியது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல, ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகும், வெற்றி ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேர்தல் குழுவிடம் இதுவரை, 25 புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.பி.வி.பி., எனப்படும் பா.ஜ.,வின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யு.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம், இடதுசாரி ஆதரவு பெற்ற எஸ்.எப்.ஐ-., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஏ.ஐ.எஸ்.ஏ., கூட்டணி ஆகியவை டில்லி மாணவர் சங்கத் தேர்தலில் களம் இறங்கிஉள்ளன.
டில்லி முதல்வர் ரேகா குப்தா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மறைந்த அருண் ஜெட்லி மற்றும் அஜய் மக்கான் உள்ளிட்டோர் டில்லி மாணவர் சங்கத் தலைவர் பதவி வகித்தவர்கள்.