ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து மருத்துவ விடுப்பில் சென்ற விமானிகள்
ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து மருத்துவ விடுப்பில் சென்ற விமானிகள்
ADDED : ஜூலை 24, 2025 09:10 PM

புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த மோசமான விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவைச் சேர்ந்த 112 விமானிகள் மருத்துவ விடுப்பில் சென்றதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம் கிளம்பிய சில விானடிகளில் நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து விமானிகள் எடுத்த மருத்துவ விடுப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் முரளீதர் மோகல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: குஜராத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியாவில் மருத்துவ விடுப்பில் செல்வோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. கடந்த 16 ம் தேதி மட்டும் 112 விமானிகள் மருத்துவ விடுப்பில் சென்றனர்.
அதில் 51 கமாண்டர்கள்(பி1). 61 பேர் முதல் அலுவலர்கள் (பி2) ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மனரீதியிலான ஆலோசனை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. எந்தவொரு பிரச்னையையும் அங்கீகரித்து, சமாளிப்பதில் விமான குழுவினருக்கு உதவவும், ஆதரிக்கவும் முன்னெச்சரிக்கை மற்றும் தண்டனையற்ற திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.
விமான விபத்துகளில் தரையில் உள்ளவர்களும் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தனி இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தனியாக எந்தவொரு கொள்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.