பிரதமருக்கு எதிராக அவதுாறு கருத்து: லாலு மகன் மீது வழக்குப்பதிவு
பிரதமருக்கு எதிராக அவதுாறு கருத்து: லாலு மகன் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 24, 2025 02:14 AM

மும்பை: பிரதமர் மோடியின் பீஹார் பயணத்தை விமர்சித்து, 'ஓட்டுத் திருட்டு' தொடர்பாக அவதுாறு பரப்பிய அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது மஹாராஷ்டிராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பீஹார் சென்றார். சுகாதாரம், மின் சாரம் உட்பட பல்வேறு துறைகளில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.
பிரதமரின் பீஹார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் விமர்சித்துஇருந்தார்.
போலி வாக்குறுதிகளை தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து, மஹாராஷ்டிராவின் பா.ஜ., - எம்.எல்.ஏ., மிலிந்த் ராம்ஜி நரோடே, கட்ஜிரோலி போலீசில் புகார்அளித்தார்.
இதையடுத்து, தேஜஸ்வி மீது, பல்வேறு பிரிவுகளில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள அவர், ''இப்போதெல்லாம், போலி வாக்குறுதி என்ற வார்த்தையை சொல்வதும் குற்றமாகிவிட்டது. வழக்குப் பதிவு செய்வதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம். உண்மையை பேச எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் உண்மைக்கு அஞ்சுகின்றனர்,'' என தெரிவித்தார்.