ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பிடியில் 215 பள்ளிகள்!: டேக் ஓவர் செய்கிறது அரசு நிர்வாகம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பிடியில் 215 பள்ளிகள்!: டேக் ஓவர் செய்கிறது அரசு நிர்வாகம்
ADDED : ஆக 24, 2025 02:27 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான ஜமாத் - இ - இஸ்லாமியின் பிடியில் இருந்த 215 பள்ளிகளை, அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், அவற்றிற்கு நிதியுதவி செய்யும் குழுக்கள் போன்றவற்றை கண்டறிந்து, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
தடை செய்தது அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் - இ - இஸ்லாமி என்ற அமைப்பை, 2014 பிப்ரவரியில் அப்போதைய மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் அந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
இதனால், ஜமாத் - இ - இஸ்லாமி மற்றும் அதன் பலா - இ - ஆம் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளின் நிலைமை கேள்விக்குறியானது.
இங்கு, 51,000 மாணவர்கள் படிக்கும் சூழலில், அந்த பள்ளிகளை, ஜம்மு - காஷ்மீர் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை நேற்று முன்தினம் பிறப்பித்தது.
அதில், 'தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பதான ஜமாத் - இ - இஸ்லாமியின் கீழ் 215 பள்ளிகள் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சேர உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'பள்ளிகளில் செயல்பட்ட நிர்வாகக் குழுக்களின் காலம் முடிந்து விட்டது. அரசின் கட்டுப்பாட்டுக்கு பின், அப்பள்ளிகள் மாவட்ட நீதிபதி பொறுப்பின் கீழ் செயல்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள 215 பள்ளிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை, அந் தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
சம்பந்தப்பட்ட பள்ளி கள் இருக்கும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், போலீசார் உதவியுடன் ஜமாத் - இ - இஸ்லாமி பள்ளிகளில் நேற்று ஆய்வு நடந்தன. அங்குள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர்.
பின்னர், அரசு கட்டுப்பாட்டில் வந்தது தொடர்பான ஆவணங்களை பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கினர்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீர் அரசின் இந்த முடிவுக்கு, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி, அப்னி கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூப் முப்தி கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கட்சி, தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக பா.ஜ.,வின் கொள்கைகளை பின்பற்றுவது துரதிர்ஷ்டவசமானது,'' என விமர்சித்துள்ளார்.
வரவேற்பு ஆனால், ஜமாத் - இ - இஸ்லாமி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த முடிவை வரவேற்று உள்ளனர்.
இது குறித்து, அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அப்பள்ளி ஒன்றின் ஆசிரியர் முஹமது இஷாக் கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிறைய சிரமங்களை எதிர்கொண்டோம். அவை எல்லாம் இப்போது நெறிப்படுத்தப்படும் என நம்புகிறோம்,'' என்றார்.
அந்த பள்ளியில் பயிலும் மாணவி அலியா இர்ஷாத் கூறுகையில், ''இந்த முடிவால் பள்ளிகள் செழிக்கும்; மேம்படும். ஆசிரியர்களும், மாணவர்களும் நிச்சயம் பயனடைவர்,'' என நம்பிக்கை தெரிவித்தார்.